1629.

     போக முடையார் பெரும்பற்றப்
          புலியூர் உடையார் போதசிவ
     யோக முடையார் வளர்ஒற்றி
          யூர்வாழ் உடையார் உற்றிலரே
     சோகம் உடையேன் சிறிதேனும்
          துயிலோ அணையா குயில்ஒழியா
     தேகம் அயர்ந்தேன் என்னடிநான்
          செய்வ தொன்றும் தெரிந்திலனே.

உரை:

      சிவபோகமே யுடையவரும், பெரும்பற்றப் புலியூரிற் கோயில் கொண்டவரும், சிவஞான சிவயோகங்களை யுடையவரும் செல்வம் பெருகும் திருவொற்றியூரில் வாழ்பவருமாகிய தியாகப் பெருமான் இன்னும் என்பால் வருகின்றாரில்லை யாதலால், நான் தளர்ச்சி மிக வுடையனாயினேனாக, இரவில் உறக்கம் சிறிதும் இல்லேனாயினேன்; இரவு முற்றும் குயில் கூவுவ தொழியா தாயிற்று; உடம்பும் மெலிவுற்றேன். இவ்வாற்றால் செய்வதொன்று மறியாது திகைக்கின்றேன், காண். எ.று.

     சிவபோகம் - சிவானந்தம். பெரும்பற்றப் புலியூர் - தில்லையிற் கூத்தப் பிரான் திருக்கோயில் மூலட்டானம். “பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே” என்று திருநாவுக்கரசர் கூறுவது காண்க. இடைக்காலச் சோழ பாண்டியர் காலக் கல்வெட்டுக்களும் (ஏ. ஆர். 268/1913) பெரும்பற்றப் புலியூர் என்றே வழங்குகின்றன. போத சிவயோகம், சிவஞான சிவயோகம் என இயையும். சிவஞான சிவயோக சிவபோகம் என்ற முறையில் இவை சாத்திரங்களில் பேசப்படுகின்றன. சோகம் - தளர்ச்சி. துயில் சிறிதும் அணையா எனப் பன்மையாற் கூறுவது, இடையறவு படும் உறக்கங்கள் பற்றி. குயில், பன்மை குறித்த ஒருமை. உறக்கமின்மை உடம்பிற்குத் தளர்ச்சி நல்குதலால், தேகம் அயர்ந்தேன் என்று சொல்லுகிறாள். தேக வயர்ச்சி அறிவை மயக்குதலின், “செய்வதொன்றும் தெரிந்திலன்” என வுரைக்கின்றாள்.

     (26)