163.

    முற்றுமோ மனம் முன்னி நின்பதம்
    பற்றுமோ வினைப்பகுதி யென்பவை
    வற்றுமோ சுக வாழ்வு வாய்க்குமோ
    சற்று மோர்கிலேன் தணிகை யத்தனே.

உரை:

     திருத்தணிகையில் எழுந்தருளும் தந்தையே, என் மனத்தெழும் ஆசை நிறை வெய்துமோ? நின்னுடைய திருவடியை என் மனம் தானும் அடைந்து பற்றிக் கொள்ளுமோ? கடல் போற் பெருகி நிற்கும் என் வினைகள் பற்றற வொழிந்து போகுமோ? பேரின்பம் நல்கும் திருவருள் வாழ்வு எனக்கு எய்துமோ? சிறிதும் தெரியவில்லை, எ. று.

     அத்தன் - தந்தை. மனத்தெழும் ஆசை நிறையுமோ என வினவுபவர். அவ்வாசையைத் தெரிவிக்க லுற்று, என் மனம் பிறபொருள் மேற் சென்று பற்றுவதை விடுத்து நின் திருவடியைப் பற்ற வேண்டும் என்பாராய், “மனம் முன்னி நின்பதம் பற்றுமோ” என்று கூறுகின்றார். முன்னுதல்-நினைத்தல். மனத்தின் தொழில் நினைத்தலாதலால் “முன்னிப் பற்றுமோ” என்கின்றார். வினைப்பகுதி வற்றுமோ என்றலின், வினைப்பகுதிகள் கடல் போல் நிறைந்து சூழ்ந்திருக்கின்றன என்பது உய்த்துணரப்படுகிறது. வினைப்பகுதி-நல்வினையும் தீவினையுமாகிய வினைவகை. திருவருளால் எய்தும் பேரின்பப் பெருவாழ்வைச் “சுக வாழ்வு” என்று குறிக்கின்றார். சிறிதும் எண்ணி யுணர மாட்டாமை தோன்றச் “சற்றும் ஓர்கிலேன்” என வுரைக்கின்றார். ஓர்தல் - உணர்தல். சுக வாழ்வு வாய்க்கும் என்று உணர்ந்த விடத்து உள்ளத்தில் எழுச்சி தோன்றித் திருவடி நினைவை ஊக்குவிக்குமாதலால் “சற்றும் ஓர்கிலேன்” என முறையிடுகின்றார்.

     இதனால், மனம் படர்ந்து முருகன் திருவடியைப் பற்றுதற்கு ஊக்கமருள வேண்டியவாறாம்.

     (13)