1630.

     தாமப் புயனார் சங்கரனார்
          தாயில் இனியார் தற்பரனார்
     ஓமப் புகைவான் உறும்ஒற்றி
          யூர்வாழ் வுடையார் உற்றிலரே
     காமப் பயலோ கணைஎடுத்தான்
          கண்ட மகளிர் பழிதொடுத்தார்
     சேமக் குயிலே என்னடிநான்
          செய்வ தொன்றும் தெரிந்திலனே.

உரை:

      நலம் பொருந்திய குயில் போன்ற தோழி, மாலையணிந்த தோளையுடையவரும், பெற்ற தாயினும் இனிமை செய்பவரும், தற்பரனும், ஓமப் புகை யெழுந்து வானளாவும் திருவொற்றியூரில் வாழ்பவருமான சிவபிரான் இன்னும் என்பால் வந்திலர்; அதனாற் காமதேவனும் தன் மலரம்புகளை என்மேற் சொரியலுற்றான்; என் மெலிவு கண்ட அயல் மகளிர் அலர் கூறுகின்றார்கள்; யான் செய்வதறியாது திகைக்கின்றேன். எ.று.

     தாமம் - மாலை; ஈண்டுக் கொன்றை மாலை மேற்று. பெற்ற தாயினும் பேரன்புடையராகலின், “தாயில் இனியார்” எனக் கூறுகிறாள். “தாயினும் நல்ல தலைவரென்றடியார் தம்மடி போற்றிசைப்பார்கள்” (திருக்கோண மலை) எனவும், தாயினும் நல்ல சங்கரன்” (ஆதிபுரா) எனவும் சமயக் குரவர் உரைப்பர். தற்பரன் - தன்னின் வேறில்லாத பரமன். உண்மை ஞானம் வேண்டி ஓமம் செய்யப்படுவதால், “ஓமப் புகை வானுறும் ஒற்றியூர்” எனக் கூறுகின்றார் “ஓமம் செய்து உணர்மின்கள் உள்ளத்தால்” (கடம்பந்துறை) என நாவுக்கரசர் நவில்கின்றார். வேட்கை மிகுதி பற்றி, காமதேவனைக் “காமப் பயல்” எனக் கடிகின்றாள். பையல் - பயல் என வந்தது. கண்ட மகளிர் - நங்கையின் மேனி வேறுபாடு கண்ட அயல் மகளிர்; நட்புறவு சிறிதுமில்லாத ஏதிற் பெண்டிருமாம். பழி, ஈண்டு அலருரை குறித்தது. காம மிகுதியும் அலருரையும் நங்கையின் திகைப்புக் கேதுவாயினவாம்.

     (27)