1632. காலங் கடந்தார் மால்அயன்தன்
கருத்துங் கடந்தார் கதிகடந்தார்
ஞாலங் கடந்த திருஒற்றி
நாதர் இன்னும் நண்ணிலரே
சாலங் கடந்த மனந்துணையாய்த்
தனியே நின்று வருத்தல்அல்லால்
சீலங் கடந்தேன் என்னடிநான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே.
உரை: கால தத்துவத்தை யில்லாதவரும், திருமால் பிரமன் ஆகியோர் அறிவெல்லைக்கு அப்பாற் பட்டவரும், பிறப்பில்லாதவரும், நிலவுலகைப் புகழாற் கடந்த திருவொற்றியூர்த் தலைவருமாகிய சிவபெருமான் இன்னமும் என்பால் வந்திலர்; அதனால், எண்ணங்களின் கூட்டமில்லாத மனமொன்றே துணையாகக் கொண்டு தனி நின்று வருந்துவதன்றிப் பெண்மைக்குரிய சீலத்தையும் கடந்தொழிந்தேனாதலால், செய்வதறியாது திகைக்கின்றேன். எ.று.
காலம் - காலதத்துவம்; தத்துவாதீதன் என்பது கருத்து. இது பற்றியே சிவனைக் காலாதீதன் எனச் சிவாகமங்கள் கூறுகின்றன. திருமாலும் பிரமனும் முறையே பசுபாச ஞான வெல்லைக்குள் இயலுபவராதலின், “மாலயன் தன் கருத்தும் கடந்தார்” எனவும், அதனாற் பிறப்பிறப்புக்கள் இல்லாதவராயினார் என்பாளாய், “கதியும் கடந்தார்” எனவும் இயம்புகின்றாள். ஞாலம் - நிலவுலகம். ஞாலத்தவர் புகழ்க்கு ஞாலம் ஆதாரமாவது போலாது திருவொற்றியூர் நாதரின் புகழ்க்கு அவரே யாதார மென்றற்கு, “ஞாலம் கடந்த திருவொற்றி நாதர்” என நவில்கின்றாள். சாலம் - கூட்டம். பல்லாயிர எண்ணக் கூட்டத்துக்கு இடமாய் மயங்கும் இயல்பினதாகலின் வேறு எண்ணமின்றிச் சிவனை நினைந்த நினைவுடையாளதல் தோன்ற “சாலம் கடந்த மனம் துணையாய்த் தனியே நின்று வருந்தலல்லால்” என்கின்றாள். சாலத்தை மயக்கப் பொருளதாக்கி, மயக்கமில்லாத மனம் எனினும் அமையும். சீலம், ஈண்டுப் பெண்மைக்குரிய அடக்கம் ஒடுக்கம் முதலிய நற்பண்புகள். (29)
|