87. குறி யாராய்ச்சி
திருவொற்றியூர்
அஃதாவது
குறமகளிரைக் கொண்டு குறி கேட்பதும், அவர்கள் மகளிர் கைக்குறியும் முகக்குறியும் நோக்கி
அவர் உவப்பன வுரைப்பதும் வழக்காக இருந்தமையின், இளமகளிர் குறிகேட்பது நூல் வழக்காயிற்று.
குமரகுருபரர் பாடிய மீனாட்சியம்மை குறம் சான்றாக நிற்கிறது. குறி கேட்பதும் கூறுவதும் 'குறம்'
என வழங்கும். ஈண்டுப் பெருந்திணை நங்கை குறமகளை வருவித்துத் தான் காதலித் தொழுகும்
திருவொற்றியூர்த் தியாகப் பெருமான் தன்னைக் கூடி மணப்பது செய்வாரோ என உசாவுகின்றாள்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1634. நந்தி மகிழ்வாய்த் தரிசிக்க
நடனம் புரியும் நாயகனார்
அந்தி நிறத்தார் திருஒற்றி
அமர்ந்தார் என்னை அணைவாரோ
புந்தி இலள்என் றணையாரோ
யாதுந் தெரியேன் புலம்புகின்றேன்
சிந்தை மகிழக் குறமடவாய்
தெரிந்தோர் குறிதான் செப்புவையே.
உரை: குறவரினத்து இளமகளே, நந்தி யெம்பெருமான் மன மகிழ்ச்சியுடன் கண்டு இன்புற மன்றில் திருக்கூத்தாடும் தலைவனும், அந்தி மாலைப் போதின் செந்நிறத்தை யுடையவரும், திருவொற்றியூரில் எழுந்தருள்பவருமாகிய தியாகப் பெருமான் போந்து என்னை மணந்து கொள்வாரோ? அறிவில்லாதவள் என்று மறுத்து விடுவாரோ? ஒன்றும் தெரியாமல் வருந்துகின்றேனாதலால், என் மனம் உவகையுற ஆராய்ந்து ஒரு குறி சொல்லுவாயாக. எ.று.
நந்தி - சிவபுரத்துச் சிவகணங்களுக்குத் தலைவர்; இவரை நந்தி யெம்பெருமான் என்று அறிஞர் கூறுவர். திருநடம் புரியும் சிவனது திருமுன்பிருந்து யாவரும் இனிது காண முறை செய்வது இவரது இனிய தொழில்: இவரது சிறப்பு நோக்கிச் சிவபிரான் இவர் நன்கு கண்டு இன்புறுமாறு தில்லைமன்றில் ஆடல் புரிந்தமையின் “நந்தி மகிழ்வாய்த்தரிசிக்க நடனம் புரியும் நாயகனார்” என நவில்கின்றாள். அந்தி வண்ணன் எனப்படுவது பற்றி, “அந்தி நிறத்தார்” என்கின்றாள். அந்தி - அந்திமாலை. அணைத்தல் - மணம் செய்து கொள்ளல். புந்தி - ஈண்டு நல்லறிவின் மேற்று. புலம்புதல் - தனிமையுறல். குறி - எதிர்கால நிகழ்ச்சிக் குறிப்பு. சிந்தை மகிழத் தெரிந்து குறி செப்புக என இயையும்.
இதனால், நங்கை தியாகப் பெருமான் தன்னை மணந்து கூடுவரோ எனக் குறி கேட்டவாறாம். இனி வருவனவற்றிற்கும் இதுவே கருத்தாகக் கொள்க. (1)
|