1636.

     ஆழி விடையார் அருளுடையார்
          அளவிட் டறியா அழகுடையார்
     ஊழி வரினும் அழியாத
          ஒற்றித் தலம்வாழ் உத்தமனார்
     வாழி என்பால் வருவாரோ
          வறியேன் வருந்த வாராரோ
     தோழி அனைய குறமடவாய்
          துணிந்தோர் குறிநீ சொல்லுவையே.

உரை:

      சக்கரப்படை யேந்தும் திருமாலாகிய விடையையுடையவரும், பேரருளையுடையவரும், அளந்து காண முடியாத பேரழகுடையவரும், ஊழிக்காலம் வந்தாலும் ஒரு கேடும் இல்லாத திருவொற்றியூராகிய திருப்பதியில் எழுந்தருளும் உத்தமனுமாகிய சிவபிரான், என் பக்கல் வருவாரா, நலமில்லாத யான் வருந்துமாறு வாரா தொழிவாரா? தோழி போன்ற குற மடந்தையே, காலக் குறிப்பைத் தெளிந்து ஒரு குறி சொல்லுக. எ.று.

     ஆழி - சக்கரப் படை. ஈண்டு அதனையுடைய திருமாலுக்கு ஆயிற்று. பேரருட் செல்வரென்று பொருள்படும் ஈசன் என்று சிறப்பிக்கப்படுவதால் “அருளுடையார்” என்றும், சிவனது பேரழகு அளவைகளால் அளந்து காண வொண்ணாதாகலின், “அளவிட்டறியா அழகுடையா” ரென்றும் இசைக்கின்றாள். ஊழி - விண் பாதல முதல் யாவும் ஒடுங்கும் இறுதிக் காலம். “ஊழி யந்தத்தில் ஒலிகடல் ஓட்டத்து உலகங்களை” மூடி யழிக்கும் அந்நாளினும் அழிவில்லது என்றற்கு “ஊழி வரினும் அழியாத ஒற்றித் தலம்” என வுரைக்கின்றாள். திருவருட் கூட்டத்துக்கு உரிய நலம் தன்பால் இல்லாமை புலப்பட, “வறியேன்” என மொழிகின்றாள். வாராவிடில் வருந்துதல் ஒருதலையாதலால் “வருந்த வாராரோ” எனக் கேட்கின்றாள். கரும நிகழ்ச்சியை நாளும் கோளும் கண்டு துணிய வேண்டுதலின், “துணிந்தோர் குறியைச் சொல்லுவையே” என்று உரைக்கின்றாள்.

     (3)