1637. அணியார் அடியார்க் கயன்முதலாம்
அமரர்க் கெல்லாம் அரியர்என்பாம்
பணியார் ஒற்றிப் பதிஉடையார்
பரிந்தென் முகந்தான் பார்ப்பாரோ
தணியாக் காதல் தவிர்ப்பாரோ
சார்ந்து வரவு தாழ்ப்பாரோ
குணியா எழில்சேர் குறமடவாய்
குறிதான் ஒன்றும் கூறுவையே.
உரை: அளப்பரிய அழகுடைய இளங்குற மங்கையே, மெய்யடியார்க்கு அணுக்கராய், பிரமன் முதலிய தேவர்கட்கெல்லாம் பெறற்கரியவரானவரும், என்பு மாலையை அணியாகக் கொண்டவரும், திருவொற்றியூரை யுடையவருமாகிய தியாகப் பெருமான் அன்பு கொண்டு என் முகத்தைப் பார்ப்பாரா? அதனால் குறையாது பெருகும் என் காதல் வேட்கையை நீக்குவாரா? என்னை யடைய வருதற்குத் தாமதிப்பாரா? அவர் செய்வதறிந்து குறியொன்று சொல்லுக. எ.று.
மெய்யடியார்க்கு எளியராய்ச் சிறிதும் பிரிவின்றி அருகில் இருப்பவராதலின், “அணியார் அடியார்க்கு” என்றும், புண்ணிய போக நுகர்வே நினையுமுள்ளத்தராதலின், பிரமன் முதலிய தேவர்கட்குப் பெறலரியர் என்பாளாய், “பிரமன் முதலாம் அமரர்க்கெல்லாம் அரியர்” என்றும் இயம்புகின்றாள். செத்த தேவர்களின் என்பை மாலையாகத் தொடுத்தணிதலின், “என்பாம் பணியார்” என்கின்றாள். பணி - பூணாரம். “செத்தார் தம் என்பணிந்து சேவேறித் திரிவீர்” (நாகைக்) என்பர் நம்பியாரூரர். பரிந்து பார்த்தல் - அன்பு கனிய நோக்குதல். தணியாக் காதல் - குறைதலின்றிப் பெருகும் காதல் வேட்கை. கூட்டத்தால் தணியும் வேட்கை வெம்மை, அஃது எய்தாமையாற் பெருகிய வண்ண மிருத்தலின், “தணியாக் காதல் தவிர்ப்பாரோ” என வினாவுகின்றாள். தவிர்த்தல், ஈண்டுக் குறைத்தல் மேற்று. சார்ந்து வரவு - சார வருதல்; அஃதாவது மெய் தீண்ட மேவுதல். தாழ்த்தல் - தாமதித்தல். குணித்தல்-அளவிடல். ஒன்றும், உம்மை இசை நிறை. (4)
|