1638.

     பொன்னார் புயத்துப் போர்விடையார்
          புல்லர் மனத்துட் போகாதார்
     ஒன்னார் புரந்தீ உறநகைத்தார்
          ஒற்றி எனும்ஓர் ஊர்அமர்ந்தார்
     என்னா யகனார் எனைமருவல்
          இன்றோ நாளை யோஅறியேன்
     மின்னார் மருங்குல் குறமடவாய்
          விரைந்தோர் குறிநீ விளம்புவையே.

உரை:

      மின்னற், கொடிபோல் நுணுகிய இடையையுடைய இளங்குறமகளே, திருவீற்றிருக்கும் தோளையுடைய திருமாலாகிய விடையையுடையவரும், அற்பர் மனத்தின்கட் செல்லாதவரும், பகைவருடைய முப்புரங்கள் தீயுற்றெரிந்து கெட நகைத்தவரும், ஒற்றியென்னும் பெயரையுடைய ஊரின்கண் எழுந்தருள்பவரும், எனக்கு நாயகருமாகிய சிவபெருமான் என்னைக் கூடுவது இன்றோ நாளையோ தெரிகிலேன்; குறிகண்டு விரைந்து சொல்லுக. எ.று. மின்னார் என்றவிடத்து ஆர், உவமப் பொருட்டு. மருங்குல் - இடை. பொன் - திருமகள். சிவன தூர்தியாகிய விடையைத் திருமால் என்பதுபற்றி, “பொன்னார் புயத்துப் போர்விடை” என்று கூறுகிறாள். போர்விடை யென்றது, பேராற்றலை யுணர்த்தற்கு. புல்லர் - புல்லறிவு படைத்த அற்பர். தீ நினைவுகளால் இருள் படிந்திருத்தலின், “புல்லர் மனத்துட் போகாதார்” எனப் புகல்கின்றாள். ஒன்னார் - பகைவர்; ஈண்டுத் திரிபுரத் தசுரராகிய பகைவர் மேற்று. திரிபுரத்தை நகைத் தெரித்தது பற்றி “ஒன்னார் புரம் தீயுற நகைத்தார்” என்று கூறுகிறாள். ஒற்றியென்னும் சொல் கடன்பட்ட தென்ற குறிப்புடைமையின், ஊர்க்குப் பெயராதல் அமையாதாயினும், அமைந்திருத்தலின் “ஒற்றி யெனும் ஓர் ஊர் அமர்ந்தார்” என வுரைக்கின்றாள். “ஒற்றியூர் என்ற ஊனத்தினாலது தானோ, அற்றப்பட ஆரூரதென் றகன்றாயோ” (கோடிக்) என நம்பியாரூரர் கூறுவது காண்க. நாயகன், ஈண்டுக் காதற் கணவன் மேல் நின்றது. மருவல் - காதலாற் கூடுதல். வேட்கைத் துடிப்புப் புலப்படுத்த விரைந்து “விளம்புவையே” என இயம்புகின்றாள்.

     (5)