1639. பாலிற் றெளிந்த திருநீற்றர்
பாவ நாசர் பண்டரங்கர்
ஆலிற் றெளிய நால்வர்களுக்
கருளுந் தெருளர் ஒற்றியினார்
மாலிற் றெளியா நெஞ்சகத்தேன்
மருவிக் கலக்க வருவாரோ
சேலிற் றெளிகட் குறப்பாவாய்
தெரிந்தோர் குறிநீ செப்புகவே.
உரை: சேல் மீன் போன்ற தெளிந்த கட்பார்வையையுடைய குறப்பாவையே, பால்போல் வெண்மையான திருநீற்றையணிபவரும், அன்பர் பாவங்களைப் போக்குபவரும், பண்டரங்கமென்னும் கூத்தை யாடுபவரும், ஆலின் கீழ் இருந்து முனிவர் நால்வருக்கு ஞானத் தெளிவு நல்குபவரும், திருவொற்றியூரை யுடையவருமான தியாகப்பெருமானார் வேட்கை மயக்கத்தால் தெளிவில்லா நெஞ்சினையுடைய என்னைச் சேர்ந்து கூடவருவாரா? குறி கண்டு தெளிந்து குறம் கூறுவாயாக. எ.று.
சேல்மீன் வடிவுக்கும், தெளிவு கட்பார்வைக்கும் பொருந்துவனவாம். திருநீற்றின் வெண்மைக்குப் பால் உவமமாகும். “பாலையன்ன வெண்ணீறு பூசுவர்” (கொச்சை) என ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. பண்டரங்கம், ஒருவகைக் கூத்து; இது பாண்டரங்கம் எனவும் வழங்கும். “தேர் முன்னின்ற திசைமுகன் காணப், பாரதி யாடிய வியன் பாண்டரங்கம்” (சிலப். 6 : 44-5) என்பது சிலப்பதிகாரம். பாரதி யாடியது, பாரதி வடிவில் சிவன் ஆடியது எனப் பொருள் கூறுப. “திருத்தோணிபுரத்துறையும் பண்டரங்கர்க் கென்னிலைமை பரிந்தொருகாற் பகராயே” (தோணி) என ஞானசம்பந்தர் உரைப்பது அறிக. ஆல் - கல்லால மரம். நால்வர் - சனகர் முதலிய முனிவர் நால்வர். மறை ஞானப் பயிற்சியில் உளதாய மருட்கை நீங்க இறைவன் தெளிவுரை நல்கினானென்ற வரலாறு பற்றி, “ஆலிற்றெளிய நால்வர்களுக் கருளும் தெருளர்” எனச் செப்புகின்றாள். மால் - காதல் வேட்கையால் உளதாகிய மயக்கம். மருவல் - நெருங்குதல்; கலத்தல் - கூடல். (6)
|