164. அத்தனே தணி காசலத் தருள்
வித்தனே மயில் மேற்கொள் வேலனே
பித்தனேன் பெரும் பிழை பொறுத்திடில்
சுத்த வன்பர்கள் சொல்வ ரேதமே.
உரை: தணிகை மலையில் எழுந்தருளும் அத்தனே, திருவருட் பேற்றுக்குக் காரணமானவனே, மயில் மேல் ஏறி வந்தருள்பவனே, பித்துக் கொண்டவனாகிய என்னுடைய பெரிய பிழைகளைப் பொறுத்து அருளாதரவு நல்குவாயாயின் தூய அன்புடைய நல்லோர்கள் அது குற்றமென்று சொல்லுவரென நினைக்கின்றாயோ? எ. று.
தணிகாசலம்-தணிகைமலை. அசலம்-மலை. வித் தென்றும் சொல் காரணப்பொருளதாகலின், அருள் வித்தன் என்பது திருவருட்பேற்றுக்குக் காரணமானவன் என்று பொருள் கூறப்பட்டது. “நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்” (குறள்) என்பது காண்க. வேலன் - வேற்படையை யுடையவன். பித்தன்-பித்தேறியவன். பித்துடையனாதலால் செய்வனயாவும் பெரும் பிழையாம் என்றற்குப் “பித்தனேன் பெரும் பிழை” எனவும், பிழையைப் பொறுத்து விடுவது மேலும் மேலும் பிழை செய்தற்கிடமாம் என்று கண்டு அன்பர்கள் குற்றம் கூறுவர் என்று நினைந்து அருள் புரியத் தாழ்க்கின்றாயோ என்பாராய்ப் “பிழை பொறுத்திடில் சுத்த அன்பர்கள் சொல்வர் ஏதமே” எனவும் இயம்புகின்றார். ஏதம்-குற்றம். ஏகாரம் வினா. பிழை யில்லாத தூய அன்புடைய தொண்டர் பெருமக்கள் அருகே சூழ்ந்திருப்பராதலின், அவர்களைச் “சுத்த அன்பர்கள்” என்று கூறுகின்றார்.
இதனால், திருவருட் பித்தேறிய எனக்கு அருள்வது கண்டு அன்பர்கள் குற்றங் கூறுவர் என நினையாதருள்க என முறையிட்டவாறாம். (14)
|