1640.

     நிருத்தம் பயின்றார் நித்தியனார்
          நேச மனத்தர் நீலகண்டர்
     ஒருத்தர் திருவாழ் ஒற்றியினார்
          உம்பர் அறியா என்கணவர்
     பொருத்தம் அறிந்தே புணர்வாரோ
          பொருத்தம் பாரா தணைவாரோ
     வருத்தந் தவிரக் குறப்பாவாய்
          மகிழ்ந்தோர் குறிதான் வழுத்துவையே.

உரை:

      குறமகளே, ஆடல் புரிபவரும், நித்தப் பொருளாகியவரும், அன்பு நிறைந்த மனமுடையவரும், நீலநிறக் கழுத்தை யுடையவரும், ஒருவரும், திருமகள் வாழும் திருவொற்றி யூரவரும், தேவர்களாலும் அறியப் படாதவரும், எனக்குக் கணவருமாகிய தியாகப் பெருமான் பொருத்த நிமித்தம் பார்த்து என்னைக் கூடுவரோ, பொருத்தம் நோக்காமலே கூடுவாரோ, இவ் வெண்ணங்களால் வருந்தும் என் வருத்தம் நீங்க, மனமகிழ்ந்து எனக்கு ஒரு குறி சொல்லுக. எ.று.

     பாவை போன்ற குறமகளைக் “்குறப்பாவாய்” என்று கூறுகிறாள். நிருத்தம் - கூத்து. என்றுமுள்ள பரம்பொருளாதலால் “நித்தியனார்” என்கின்றாள். நேசம் - அன்பு. ஒருவரென்று புகழப்படுவதால் “ஒருத்தர்” என உரைக்கின்றாள். “ஒருவனே போற்றி ஒப்பில் அப்பனே போற்றி” (சதகம்) என்று மணிவாசகர் போற்றுதல் காண்க. செல்வ வளம் மிக்கிருப்பது பற்றித் “திருவாழ் ஒற்றியினார்” என உரைக்கின்றாள். உம்பராலும் உலகவராலும் அறியப்படாத முதல்வனாதலால், “உம்பர் அறியா என் கணவர்” என மொழிகின்றாள். “உம்பராலும் உலகின்னவராலும் தம் பெருமையளத்தற் கரியான்” (நறை. சித்) என ஞானசம்பந்தர் கூறுகிறார். மகளிரை மணம்புணர்வோர் பல்வகைப் பொருத்த நிமித்தம் பார்ப்பது இயல்பாதலால், “பொருத்தமறிந்தே புணர்வாரோ பொருத்தம் பாராதணைவாரோ” என ஐயுறுகின்றாள். இவ்வாறு ஐய வகைகளால் அலமருகின்றா ளாதலின், “வருத்தம் தவிரக் குறி வழுத்துவையே” என்று கூறுகிறாள். மங்கலச் செய்தியாதலால் மகிழ்வோடு கூறுக என்பாள், “மகிழ்ந்தோர் குறிதான் வழுத்துவையே” என வுரைக்கின்றாள். வழுத்துதல் - சொல்லுதல்.

     (7)