1641. கமலன் திருமால் ஆதியர்கள்
கனவி னிடத்துங் காண்பரியார்
விமலர் திருவாழ் ஒற்றியிடை
மேவும் பெருமை வித்தகனார்
அமலர் அவர்தாம் என்மனைக்கின்
றணைகு வாரோ அணையாரோ
தமல மகன்ற குறப்பாவாய்
தனித்தோர் குறிதான் சாற்றுவையே.
உரை: தம்பலக் கறையில்லாத குறமகளே, பிரமனும் திருமாலும் பிறரும் கனவின்கண்ணும் கண்டறியாதவரும், விமலரும், திருவீற்றிருக்கும் ஒற்றியூரின்கண் எழுந்தருளும் பெருமை பொருந்திய வித்தகரும், அமலருமாகிய சிவபெருமான் என் அகத்துக்கு இன்று வருவாரா? வாராரா? தனிப்பட ஆராய்ந்து ஒரு குறி சொல்லுக. எ.று.
தமலம் - வெற்றிலைப் பாக்கு மெல்லுவதால் வாய்ப் பற்களிற் படியும் கறை. சிறு பருவத்தேயே தம்பலம் தின்னும் இயல்பினர் குறவராதலின், அஃதில்லாத சிறப்புத் தோன்றத் “தமல மகன்ற குறப்பாவாய்” என்று கூறுகிறாள். கமலன் - தாமரையில் வீற்றிருக்கும் பிரமன். ஆதியர்-முதலியோர். நனவிற் காணாமையின், “கனவினிடத்தும் காண்பரியார்” எனக் குறிக்கின்றாள். நனவிற் கண்டனவே கனவின்கண் எய்துமென்பது பண்டையோர் கொள்கை. விமலர் - மூலமலம் எனப்படும் இயற்கை மலத்தொடர்பில்லாதவர்; அமலர் - செயற்கை மலமாகிய மாயை கன்மமென்ற மலங்களின் தொடர்பில்லாதவர். இவ் வேறுபாடு விளங்கவே, விமலர் அமலர் என இரண்டும் கூறப்படுகின்றன. இவ்வாறே, “கமல நான்முகனும் கார்முகில் நிறத்துக் கண்ணனும் நண்ணுதற்கரிய விமலனே” என்றும், “திருப்பெருந்துறையிற் செழுமலர்க் குருந்த மேவிய சீர்அமலனே” என்றும் (அருட்) மணிவாசகர் ஒரு பாட்டில் தொடுத் துரைக்கின்றார். புண்ணியப் பதியாதலின், ஒற்றியூர் திருமகட்கு வாழிடமாயினமை தோன்ற, “திருவாழ் ஒற்றி” என்று தெரிவிக்கின்றாள். வித்தகர் - எல்லா மறிந்தவர். வித்தகர்க்குப் பெருமை நிழல் போலமைதலால் “பெருமை வித்தகனார்” எனப் பேசுகின்றாள். வருவாரோ வாராதொழிவாரோ என்ற கலக்கம் நெஞ்சை வருத்துவதால், “தனித்தோர் குறிதான் சாற்றுவையே” என வுரைக்கின்றாள். (8)
|