1642.

     வன்னி இதழி மலர்ச்சடையார்
          வன்னி எனஓர் வடிவுடையார்
     உன்னி உருகும் அவர்க்கெளியார்
          ஒற்றி நகர்வாழ் உத்தமனார்
     கன்னி அழித்தார் தமைநானுங்
          கலப்பேன் கொல்லோ கலவேனோ
     துன்னி மலைவாழ் குறமடவாய்
          துணிந்தோர் குறிநீ சொல்லுவையே.

உரை:

      மலையிடமாகப் பொருந்தி வாழும் குறவரினத்து இளமங்கையே, வன்னியும் கொன்றையுமாகிய மலர்மாலைகளை யணியும் சடையையுடையவரும், நெருப்பென்னுமாறமைந்த திருமேனியையுடைய வரும், நினைந்துருகும் மெய்யன்பர்க்கு எளியவரும், திருவொற்றியூரின்கண் எழுந்தருளும் உத்தமருமாகிய தியாகப்பெருமான், என் கன்னிமையைப் போக்கினாராகலின், அவரை நான் கூடுவேனோ, கூடா தொழிவேனோ? இரண்டிலொன்றைத் துணிந்து ஒரு குறி சொல்லுக. எ.று.

     வன்னி - முன்னது வன்னி மலர்; பின்னது நெருப்பு. இதழி - கொன்றை. வடிவு ஈண்டுத் திருமேனியைக் குறிக்கிறது. உன்னுதல் - நினைத்தல். உருகுமவர் - நினைந்துருகும் அடியவர். உத்தமன் - உயர்ந்த உறவினன். கன்னி - காமஞ்சாலா இளம்பெண்; காமச்சுவை தலைப் படாதவள். காம நுகர்வு தலைப்படுவித்தலைக் 'கன்னி கழித்தல்' என்பர்; சங்க காலம் இதனைச் 'சிலம்பு கழீஇ' என்றும், 'சிலம்பு கழித்தல்' என்றும் வழங்கிற்று. 'மலை துன்னி, வாழ் குற மடவாய்' என இயைக்க; மலை நாட்டிற் பொருந்தி வாழும் குறவரினத்து இளமகள் என்பது இதன் பொருள்.

     (9)