1643.

     கற்றைச் சடைமேல் கங்கைதனைக்
          கலந்தார் கொன்றைக் கண்ணியினார்
     பொற்றைப் பெருவிற் படைஉடையார்
          பொழில்சூழ் ஒற்றிப் புண்ணியனார்
     இற்றைக் கடியேன் பள்ளியறைக்
          கெய்து வாரோ எய்தாரோ
     சுற்றுங் கருங்கட் குறமடவாய்
          சூழ்ந்தோர் குறிநீ சொல்லுவையே.

உரை:

      சுழல்கின்ற கரிய கண்களையுடைய குறப்பெண்ணே, கற்றையாய்த் திரண்ட சடையின்கண் கங்கையாற்றை வைத்திருப்பவரும், கொன்றை மலராலான கண்ணியைச் சூடினவரும், மலையாலான பெரிய விற்படையை ஏந்துபவரும், சோலைகள் சூழ்ந்த திருவொற்றியூரில் எழுந்தருளும் புண்ணியப் பொருளாகியவருமான சிவபெருமான், இன்றிரவு என் படுக்கையறைக்கு வருவாரா, மாட்டாரா? நன்கு எண்ணி எனக்குக் குறி சொல்லுக. எ.று.

     கற்றைச்சடை - பலவாய்த் திரண்ட சடை. கலத்தல் - ஈண்டு வழிந்திழிந் தோடாது நிறுத்துதல். கண்ணி - தலையிற் சூடும் மாலை. மார்பிலணியும் மாலைக்குத் தார் என்பதும், தலையிற் சூடுதற்குக் கண்ணி யென்பதும் பெயர். சிவனுக்குத் தாரும் கண்ணியும் கொன்றை மலர். பொற்றை - மலை; இது பொறை எனவும் வழங்கும். மேரு மலையை வில்லாக வளைத்துக் கொண்டவராதலால், “பொற்றைப் பெருவிற் படை யுடையார்” என்று கூறுகின்றார். புண்ணியன் - புண்ணியப் பொருளாகியவன்; புண்ணிய வுருவினன் என்றலுமுண்டு. பள்ளியறை - படுக்கையறை. சுழலுகின்ற விழியுடையவளாதல் பற்றிக் குறமகளைச் “சுற்றுங் கருங்கட் குறமடவாய்” என்று சொல்லுகிறாள். சூழ்தல் - நினைத்தல்.

     (10)