1647. ஈதல் ஒழியா வண்கையினார்
எல்லாம் வல்ல சித்தர்அவர்
ஓதல் ஒழியா ஒற்றியில்என்
உள்ளம் உவக்க உலகம்எலாம்
ஆதல் ஒழியா எழில்உருக்கொண்
டடைந்தார் கண்டேன் உடன்காணேன்
காதல் ஒழியா தென்னடிநான்
கனவோ நனவோ கண்டதுவே.
உரை: தோழி, அருள் வழங்குவதில் இடையறாத வளவிய கையை யுடையவரும், எல்லாம் வல்ல சித்தராகியவருமான சிவபெருமான், கல்வி கற்பார் நீங்காதுறையும் திருவொற்றியூரில் என் மனம் மகிழுமாறு உலகனைத்துமாகிய அழகிய திருவுருக் கொண்டு என்முன் தோன்றினாராக, யானும் கண்களாற் கண்டேன்; ஆனால், உடனே நான் அவரைக் காணே னாயினேன்; அவர்பாற் சென்ற என் காதலன்பு நீங்காது நிற்கிறது; நான் கண்டது என்னடி கனவோ நனவோ, கூறுக. எ.று.
அருளே திருமேனியாகக் கொண்ட பெருமானாதலால், “ஈதலொழியா வண்கையினார்” எனப் புகழ்கின்றாள், இடையறாது உயிர்கட்குத் திருவருளை வழங்கிய வண்ணமிருக்கின்றாரென்பது கருத்து. வண்கை - வரையாது வழங்கும் வளவிய கை. மதுரையம்பதியில் எல்லாம் வல்ல சித்தராய் விளையாடினமைபற்றி, “எல்லாம் வல்ல சித்தரவர்” என வுரைக்கின்றாள். இடைக்காலச் சோழ பாண்டியர் காலத்தில், திருவொற்றியூர் பெருங் கல்விநிலையமாய் இருந்தமையினை அங்குள்ள கல்வெட்டுக்கள் கூறுவதும், அங்குள்ள மண்டபம் வியாகரணதான மண்டபம் (கல். 195/1912) எனவும், சிவன் வியாகரணதானப் பெருமான் (கல். 120/1912) எனவும் குறிக்கப்படுவதும் வலியுறுத்துகின்றன. “உலகினுக் குயிருமாகி உலகுமாய் நின்ற தோரார்” (சிவ. சித்தி : 1 : 48) எனப் பெரியோர் ஓதுவதால், “உலகமெலாம் ஆதலொழியா எழிலுரு” எனச் சிறப்பிக்கின்றாள். “உள்ளம் உவக்க எழிலுருக் கொண்டடைந்தார்” என இயையும். தமது திருவுருவைக் கண்டும் காணா தொழிந்தேனாயினும், காதல் வேட்கை நீங்காதாயிற் றென்றற்குக் “காதலொழியாது” என்கின்றாள். கண்டதனால் நனவோ எனவும், காணாமைபற்றிக் கனவோ எனவும் கலக்க முறுகின்றாள். (3)
|