1648. தொண்டு புரிவோர் தங்களுக்கோர்
துணைவர் ஆவார் சூழ்ந்துவரி
வண்டு புரியுங் கொன்றைமலர்
மாலை அழகர் வல்விடத்தை
உண்டு புரியுங் கருணையினார்
ஒற்றி யூரர் ஒண்பதத்தைக்
கண்டுங் காணேன் என்னடிநான்
கனவோ நனவோ கண்டதுவே.
உரை: தோழி, திருத்தொண்டுகளை விரும்பிச் செய்யும் தொண்டர்கட்கு ஒப்பற்ற துணைவராகிறவரும், வரி வண்டுகள் மொய்த்துழலும் கொன்றை மலர்களாலான மாலையணிந்த அழகரும், வல்விடத்தைத் தான் உண்டு ஏனையுயிர்கட்கு அருள்செய்தவரும், திருவொற்றியூரவருமாகிய சிவபெருமானுடைய திருவடியைக் கண்ணாற் கண்டும் பின்னர்க் காணேயினேன்; இஃது என்ன கனவோ நனவோ அறிகிலேன். எ.று.
தனக்கும் பிறவுயிர்கட்கும் தொண்டு செய்வோர்க்குத் தூய நெறி காட்டுதலால், “தொண்டு புரிவோர் தங்களுக்கோர் துணைவராவார்” என்று கூறுகிறாள். திருநாவுக்கரசர், “தொண்டர்க்குத் தூநெறியாய் நின்றான்” (தலையாலங்) என்று சொல்லுவது காண்க. துணைவர் - ஓர் ஒப்பற்ற துணைவர். “புதிது மலர்ந்த கொன்றைப் பூமாலை என்பது விளங்க “சூழ்ந்து வரி வண்டு புரியும் கொன்றை மலர்மாலை யழகர்” எனப் பரவுகின்றாள். தேன் வண்டுகளின் உடல் மேல் வரிகள் பல காணப்படுதலின் “வரி வண்டு” எனச் சிறப்பிக்கின்றாள். மாற்று மருந்தில்லாத கொடிய விடமாதல் விளங்க “வல்விடம்” எனவும், அதனைச் சிவன் உண்டதனால் தேவர்களுய்ந்து அமுதம் பெற்றதுபற்றி, “வல்விடத்தை யுண்டு புரியும் கருணையினார்” எனவும் புகழ்ந்தோதுகின்றாள். “விரி கடல் வருநஞ்சமுண்டு இறைஞ்சு வானவர்தமைத் தாங்கிய இறைவன்” (வலஞ்சுழி) என ஞானசம்பந்தர் கூறுவது காண்க. ஒண்பதம் - ஞானவொளி திகழும் திருவடி. பெண்ணாதலின் முதற்கண் அதனைக் கண்டமையால், “ஒண்பதத்தைக் கண்டும்” என்றும், பின்னர்க் காணாவாறு மறைந்தமை பற்றிக் “காணேன்” என்றும், அக்காட்சியைக் கனவென்றும் நனவென்றும் தெளிய மாட்டாமையால், “கனவோ நனவோ கண்டது” என்றும் இயம்புகிறாள். (4)
|