1649.

     அடியர் வருந்த உடன்வருந்தும்
          ஆண்டை அவர்தாம் அன்றயனும்
     நெடிய மாலுங் காணாத
          நிமல உருவோ டென்எதிரே
     வடியல் அறியா அருள்காட்டி
          மறைத்தார் மருண்டேன் மங்கைநல்லார்
     கடிய அயர்ந்தேன் என்னடிநான்
          கனவோ நனவோ கண்டதுவே.

உரை:

      அடியார்க் கெய்தும் வருத்தத்துக்கு இரங்கித் தானும் உடன் வருந்தும் தலைவரும், அந்நாளில் பிரமனும் நெடிய திருமாலும் காண மாட்டாதொழிந்தவருமான சிவபெருமான், எனது எதிரே தோன்றிக் குன்றுதல் இல்லாத திருவருளைக் காண்பித்துப் பின்பு தம்மை மறைத்துக் கொண்டார்; அதனால் மருட்கையுற்று வருந்தினேனாக அயலிருந்த மகளிர் என்னைக் கடிந்துரைத்ததனால் சோர்ந்து விட்டேன்; ஈதென்ன கனவோ நனவோ தெரியேன். எ.று.

     தன்னைப்போல் தன்னடியாரும் இன்புறற் பொருட்டு அவர்களது வருத்தத்தைப் போக்கும் அருளாளனாதலால், “அடியார் வருந்த உடன் வருந்தும் ஆண்டையவர்” என்று கூறுகிறாள். ஆண்டை - ஆண்டு கொள்பவன். ஆண்டவனை, ஆண்டையென்பது உலக வழக்கு. “அடியார்தம் அல்லல் தீர்க்கும் அருமருந்து” (கோயில்) எனத் திருநாவுக்கரசர் உரைக்கின்றார். நெடி துயர்ந்து உலகளந்த சிறப்புப் பற்றித் திருமாலை “நெடுமால்” என்பர்; அதனால் “நெடிய மால்” என மொழிகின்றார். நிமலவுரு - தூய ஞானத் திருவுரு. “ஞானத்திரளாய் நின்ற பெருமான் நல்ல அடியார் மேல் ஊனத்திருளை நோக்குமதுவும் உண்மைப் பொருள்” (அண்ணா) எனச் சான்றோர் உரைப்பர். வடியல் - குறைதல். வற்றாத அருட் கடலாதலால். “வடியலறியா அருள்” என்று புகழ்கின்றாள். கண்ணுற்றுக் காணா தொழிந்தமை மனத்தில் மருட்சி தோற்றுவித்தலால், “மருண்டேன்” என்றும், வாய் வெருவலும் மேனி வேறுபாடும் கண்ட அயல் மகளிர் குற்றமாதலை நினைந்து கடிந்துரைப்பது பற்றி, “மங்கை நல்லார் கடிய அயர்ந்தேன்” என்றும் சொல்லி வருந்துகிறாள். அயர்ச்சி மறதியை யுண்டு பண்ணுவதாகலின், “கனவோ நனவோ” என்கிறாள்.

     (5)