165.

    ஏதிலா ரென வெண்ணிக் கைவிடில்
    நீதியோ வெனை நிலைக்க வைத்தவா
    சாதி வான்பொழில் தணிகை நாதனே
    ஈதி நின்னரு ளென்னும் பிச்சையே.

உரை:

     பல்வகை மரச் சாதிகள் வளர்ந்திருக்கும் பெரிய சோலைகளை யுடைய திருத்தணிகைப் பெருமானே, ஏதிலாரைச் சேர்ந்தவன் என நினைத்து என்னைக் கைவிடுவாயாயின், என்னை நின் திருவருள் நெறியில் நிலைபெற நிற்பித்தவனாதலால் உனக்கு அது நீதியாகுமோ? நினது அருள் என்னும் பிச்சையை எனக்கு இடுவாயாக, எ. று.

     ஏதிலார்- திருவருட் பேற்றுக்கு ஏதுவாய தூய அன்பில்லாதவர். நண்பர், பகைவர், அயலார் என்ற வேறுபாடு நோக்காத பெருமானாதலின் ஏதிலார் என்பதற்கு அயலார் எனப் பொருள் கொள்வது பொருந்தாமை அறிக. தூய அன்பு இல்லாமை பற்றிக் கைவிடல் நேரிதாகலின், “ஏதிலாரென வெண்ணிக் கைவிடில்” என்று கூறுகின்றார். கைவிடில் என்பது பெரும்பாலும் கைவிடாமை யுணரநின்றது. நிலைக்க வைத்தவன்- திருவருட் பேற்றுக்குரிய நன்னெறி காட்டி அதன்கண் நிற்பித்தவன். “அறிவிலாத எனைப் புகுந்தாண்டு கொண்டறிவதை யருளி மேல் நெறி யெலாம் புலமாக்கிய எந்தை” (சதக) என்று திருவாசகம் உரைப்பது காண்க. நிற்பித்தவன் நிற்பார்க்கு அருளாமை நீதியாகாது என்பது பற்றி “நீதியோ” எனக் கூறுகின்றார். இரப்பார்க்கு இடுவது பிச்சை யாதலால், “ஈதி நின் அருளென்னும் பிச்சை” என்று குறிக்கின்றார். ஈதி- ஈந்தருள்க.

     இதனால், அருள் நெறியில் என்னை நிலை பெற நிற்கச் செய்தவனாதலால் எனக்கு நின் அருளை நல்குவது நீதியே என முறையிட்டவாறாம்.

     (15)