1650.

     கொற்றம் உடையார் திருஒற்றிக்
          கோயில் உடையார் என்எதிரே
     பொற்றை மணித்தோட் புயங்காட்டிப்
          போனார் என்னைப் புலம்பவைத்துக்
     குற்றம் அறியேன் மனநடுக்கங்
          கொண்டேன் உடலங் குழைகின்றேன்
     கற்றிண் முலையாய் என்னடிநான்
          கனவோ நனவோ கண்டதுவே.

உரை:

      வெற்றியாளரும், திருவொற்றியூர்த் திருக்கோயிலை யுடையவருமான சிவபிரான், அடியேன் கண்ணெதிரெ மலைபோல் அழகிய தோள்களைக் காட்டி, யான் தனித்து வருந்த விட்டுப்போய் விட்டாராக, யான் செய்த குற்றமறியாமல் மனம் நடுங்கி மெய் மெலிந்து உருகுவேனாயினேன்; கல்போல் திண்ணிய கொங்கைகளையுடையவளே, நான் கண்டது கனவோ, நனவோ தெரியவில்லை. எ.று.

     திண்மை இளமுலைக்குச் சிறப்பாதலின், “கற்றிண் முலையாய்” என்று தோழியைப் புகழ்கின்றாள். எச்செயலிலும் தோல்வியே காணாத பரம்பொருளாதலால், “கொற்றமுடையார்” எனவும், திருவொற்றியூர்த் திருக்கோயில் முதல்வராகலின், “திருவொற்றிக் கோயிலுடையார்” எனவும் இயம்புகிறாள். பொற்றை - மலை. மணி - அழகு. காட்சியளித்த பெருமான் உடனே மறைந்தமையின், தனிமையுற்று வருத்தம் மிக்கதனால், “என்னைப் புலம்ப வைத்துப் போனார்” என்றும், நில்லாது மறைந்தமைக்குக் காரணம் காண்பவள், தன்பாற் குற்றமேதும் காணாமையால், “குற்றம் அறியேன்” என்றும் கூறுகிறாள். பிரிவருமை பற்றி மனநடுக்கமும் மெய்ம்மெலிவும் எய்துகின்றாளாதலால், “மன நடுக்கங் கொண்டேன் உடலங் குழைகின்றேன்” என்று உரைக்கின்றாள். மயக்க மிகுதலால், “என்னடி நான் கண்டது கனவோ நனவோ” என வினாவுகின்றாள்.

     (6)