1652. சலங்கா தலிக்கும் தாழ்சடையார்
தாமே தமக்குத் தாதையனார்
நிலங்கா தலிக்கும் திருஒற்றி
நியமத் தெதிரே நின்றனர்காண்
விலங்கா தவரைத் தரிசித்தேன்
மீட்டுங் காணேன் மெய்மறந்தேன்
கலங்கா நின்றேன் என்னடிநான்
கனவோ நனவோ கண்டதுவே.
உரை: கங்கையாறு விரும்பி நிற்கும் தாழ்ந்த சடையை யுடையவரும், தாமே தமக்குத் தந்தையாயவருமான சிவபிரான், நிலவுலகத்தார் விரும்புகிற திருவொற்றியூரில் சன்னிதித் தெருவில் கண்ணெதிரே நின்றாராக, பார்வை விலகாமல் கண்களாற் கண்டே னெனினும், மீளவும் காணேனாயினேன்; அதனால் மெய்யுணர்விழந்து உளம் கலங்குகிறேன்; நான் கண்டது கனவோ நனவோ தெரியவில்லை. எ.று.
சலம் - கங்கை. இழிந்தோடாது நிற்றலின், “சலம் காதலிக்கும் சடை” எனவும், சடை தாழினும் கங்கை இழியாத தன்மை விளங்கத் “தாழ்சடை” எனவும் கூறுகிறாள். உலகுக்குத் தாம் தந்தை தாயாவதன்றித் தமக்குத் தாய் தந்தையிலராதலின், “தாமே தமக்குத் தாதையனார்” என வுரைக்கின்றாள். “தாயுமிலி தந்தையிலி தான் தனியன்” (சாழல்) என்பது திருவாசகம். செல்வ நலத்தால் திருவொற்றியூரும் மக்களால் விரும்பப்படுவது தோன்ற, “நிலம் காதலிக்கும் திருவொற்றி” என்று கூறுகிறாள். நியமத்தின்கண் கண் காண எதிரே நின்றனர்; இடையே தடையாதுமின்றிக் கண்டேன் எனத் தெளிவுறுத்தற்கு, “எதிரே நின்றனர் காண், விலங்காதவரைத் தரிசித்தேன்” எனவுரைக்கின்றாள். தரிசித்தல் - காண்டல். உணர்விழந்தமை தோன்ற “மெய்மறந்தேன்” எனவும், “கலங்கா நின்றேன்” எனவும் இயம்புகிறாள். மெய்ம் மறதியும் கலக்கமும் கண்டதைக் கனவோ நனவோ என ஐயுறற் கேதுவாயினவாம். (8)
|