1653. நிரந்தார் கங்கை நீள்சடையார்
நெற்றி விழியார் நித்தியனார்
சிரந்தார் ஆகப் புயத்தணிவார்
திருவாழ் ஒற்றித் தியாகர்அவர்
பரந்தார் கோயிற் கெதிர்நிற்கப்
பார்த்தேன் மீட்டும் பார்ப்பதன்முன்
கரந்தார் கலுழ்ந்தேன் என்னடிநான்
கனவோ நனவோ கண்டதுவே.
உரை: சிறைப்புண்டமைந்த கங்கை தங்கிய நீண்ட சடையை யுடையவரும், நெற்றியிற் கண் பொருந்தியவரும், நித்தப் பொருளாகிய வரும் தலைகளை மாலையாகத் தோளிலணிபவரும், திருவொற்றியூரில் இருப்பவருமாகிய தியாகப்பெருமான், இடம் பரந்த திருக்கோயிலின் எதிரே நிற்கக் கண்டேன்; மறுபடியும் காண்பதற்குள் மறைந்துபோனார்; ஆற்றாமையால் யானும் கண்ணீர் பெருக்கினேன்; நான் கண்ட காட்சி கனவோ நனவோ அறியேன். எ.று.
நிரந்து ஆர் கங்கை - தடையுண்டு நிற்றல் பொருந்திய கங்கையாறு. “பண்டும் இன்றும் என்றும் உள்ள பொருள்” என்று பரவப்படுதலின், “நித்தியனார்” என்று கூறுகிறாள். செத்த தேவர்களின் தலைகளை மாலையாகக் கோத்தணிவது பற்றி, “சிரம் தாராகப் புயத்தணிவார்” எனச் சாற்றுகின்றாள். “தலைக்குத் தலைமாலையணிந்த தென்னே சடைமேற் கங்கை வெள்ளம் தரித்த தென்னே” (அஞ்சைக்) என நம்பியாரூரர் பாடுவது காண்க. பரந்தார் கோயில், பரந்து ஆர் கோயில் எனக் கொள்க; எங்கும் பரந்து திரிபவர் என்றுமாம். கரத்தல் - மறைதல். பார்க்கப்பட்டவர் மீளப் பார்ப்பதன்முன் மறைந்ததனால் கனவோ நனவோ எனக் கையறவு படுகின்றாள். (9)
|