1654. அளித்தார் உலகை அம்பலத்தில்
ஆடி வினையால் ஆட்டிநின்றார்
தளித்தார் சோலை ஒற்றியிடைத்
தமது வடிவம் காட்டியுடன்
ஒளித்தார் நானும் மனமயங்கி
உழலா நின்றேன் ஒண்தொடிக்கைக்
களித்தார் குழலாய் என்னடிநான்
கனவோ நனவோ கண்டதுவே.
உரை: ஒள்ளிய தொடியணிந்த கையையும், தேன் நிறைந்த மாலை யணிந்த கூந்தலையுமுடைய தோழி, அம்பலத்தில் ஆடல் புரியும் முகத்தால் உலகுயிர்களை அருள்பவரும், தத்தம் வினைக்கேற்பப் பயன் நுகர் விக்குமாற்றால் ஆட்டுகின்றவரும், தேன் துளிகள் ஒழுங்காகச் சொரியும் சோலைகளையுடைய திருவொற்றியூரை யுடையவருமான சிவபெருமான், தமது திருவுருவை யான் காணக்காட்டி உடனே மறைத்துக்கொண்டார்; கண்ட நானும், மனம் மயக்குற்று வருந்துகின்றேன்; நான் கண்டது கனவோ நனவோ, கூறுக. எ.று.
உலகைப் படைத்து உயிர்கட்கு வாழ்வளிப்பது பற்றி, “உலகை அளித்தார்” எனவும், உயிர்கள் தாம் செய்த வினைப்பயனை நுகரும் பொருட்டு ஏற்ற உடல் கருவி கரணங்களைத் தந்து இயங்கச் செய்தலால், “வினையால் ஆட்டி நின்றார்” எனவும் இயம்புகிறாள். அம்பலத்தில் ஆடும் திருக்கூத்து இவ்வுண்மைகளையுணர்த்துவதாகலின், “அம்பலத்தில் ஆடி” என்று குறிக்கின்றாள். தளி - நீர்த்துளி; ஈண்டு மலர்த் தேனின் பருத்த துளிமேற்று. தார் - ஒழுங்கு. வடிவம் - திருவுருவம். காட்டுதல் அருளலும், ஒளித்தல் மலம் பக்குவமுறும் பொருட்டு மறைத்தலுமாம். உண்மை தெரியாமல் மயங்கினேன் என்பாளாய், “நானும் மனம் மயங்கி யுழலா நின்றேன்” என்று கூறுகிறாள். மயக்கம், கனவோ நனவோ என வினாதற் கேதுவாயிற்று. (10)
|