89. ஆற்றாக் காதலின் இரங்கல்

திருவொற்றியூர்

    அஃதாவது தலைவனான தியாகப் பெருமான்பால் உண்டான மிக்க காமத்து மிடலால் ஆற்றாமை மீதூர்ந்த தலைவி, தோழியிடம் தனது பொறையரும் மாட்டாமையைப் புகன்றுரைப்பதாம். இது பாட்டுத் தோறும் தனது மாட்டாமையைப் புகல்வது காண்க.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1655.

     மந்தா கினிவான் மதிமத்தம்
          மருவும் சடையார் மாசடையார்
     நுந்தா விளக்கின் சுடர்அனையார்
          நோவ நுதலார் கண்நுதலார்
     உந்தா ஒலிக்கும் ஓதமலி
          ஒற்றி யூரில் உற்றெனக்குத்
     தந்தார் மையல் என்னோஎன்
          சகியே இனிநான் சகியேனே.

உரை:

      தோழி, கங்கையும் திங்கட்பிறையும் ஊமத்தமலரும் பொருந்திய சடையை யுடையவரும், மலமாசு இல்லாதவரும், நுந்தா விளக்கின் சுடர் போன்ற மேனியை யுடையவரும், பிறர் வருந்த ஒரு சொல்லும் சொல்லாதவரும், கண் பொருந்திய நெற்றியை யுடையவருமாகிய சிவபெருமான், அலை மோதி முழங்கும் கடற்கரையிலுள்ள திருவொற்றியூரின்கண் எழுந்தருளி, என்னுள் வேட்கை மயக்கத்தை அளித்தாராகலின், இனிமேல் யான் மயக்க நோயை பொறுக்க மாட்டேன், காண். எ.று.

     மந்தாகினி - கங்கையாறு. வான்மதி - வானத்தில் ஒளிரும் சந்திரன்; ஈண்டு அது பிறைத் திங்கள் மேற்று. மத்தம் - ஊமத்தை மலர். எருக்கும் ஊமத்தமுமாகிய மலர்களைப் பிற தெய்வங்கள் சூடா வாயினும், சிவனுக்கு ஏற்பனவாம் என்பதுபற்றி, “மத்தம் மருவும் சடையார்” என வுரைக்கின்றாள். மாசு - குற்றம்; இயற்கை மலத் தொடர்பும் அது காரணமாக உயிர்களைப் பற்றிப் பிணிக்கும் செயற்கை மலத் தொடர்புகளுமாம். மாசு - குற்றம். உயிர்களை யடைவதுபோல இம் மலமாசு சிவபரம் பொருளைப் பற்றுவ தில்லையாதலால், “மாசு அடையார்” என்று இசைக்கின்றாள். நுந்தா விளக்கு - தூண்டுகோலால் கிளரப்படாமல் இரவு பகல் எப்போதும் எரியும் நெய் விளக்கு. திருக் கோயில்களில் மூலக்கருவறையில் இதனையேற்றி எரிய விடுவர். இது நந்தா விளக்கெனவும், தூண்டா விளக்கெனவும் வழங்கும். சுடர்போல நிறமும் ஒளியும் உடைமை பற்றிச் சிவனை, “நுந்தா விளக்கின் சுடரனையார்” எனச் சொல்லுகிறாள். நுதலுதல் - சொல்லுதல். கேட்பவர் மனம் நோவாவாறு இனிமைமிகப் பேசுவரென்றற்கு “நோவா வுரையார்” என மொழிகின்றாள். நுதல்: பின்னது நெற்றிக்காயிற்று. கரைக்கண் தள்ளி மோதி அலைகளால் முழங்கும் கடலை, “உந்தாவொலிக்கும் ஓதம்” என்றுரைக்கின்றாள். உந்துதல் - தள்ளுதல். ஓதம் - கடல். காதற் காட்சிதந்து தன்னை மயக்கிய இடம் குறித்தற்கு “ஒற்றியூரில் உற்றெனக்குத் தந்தார் மையல்” என ஓதுகின்றாள். சகி: முன்னது தோழிக்காம். சகியேன் எனப் பிற்கூறுவது வினைச் சொல்லாய்ப் பொறுக்க மாட்டேன் என்ற பொருள் தருவது. சகித்தல் - தாங்குதல்; பொறுத்தல் என்றுமாம்.

     இதனால், இறைவன்பால் உண்டான காதலுறவு கை கடந்து பெருகினமையின் ஆற்றேனாகின்றேன்; தூது சென்று உதவுக எனக் குறிப்பாய் வேண்டிக் கொண்டவாறாம்.

     (1)