1656. பூமேல் அவனும் மால்அவனும்
போற்றி வழுத்தும் பூங்கழலார்
சேமேல் வருவார் திருஒற்றித்
தியாகர் அவர்தம் திருப்புயத்தைத்
தேமேல் அலங்கல் முலைஅழுந்தச்
சேர்ந்தால் அன்றிச் சித்தசன்கைத்
தாமேல் அழற்பூத் தாழாதென்
சகியே இனிநான் சகியேனே.
உரை: தோழி, தாமரையில் இருக்கும் பிரமனும் திருமாலும் வணங்கித் துதிக்கும் அழகிய கழலணிந்தவரும், எருதின்மேல் வருபவருமான திருவொற்றியூர்த் தியாகப் பெருமானுடைய திருத்தோள்களை இனிய மாலையணிந்த கொங்கைகள் குழைய அணைந்தாலன்றி, மன்மதனை கையால் வில்லிற் றொடுத்தெறியும் மலரம்புகள் செய்யும் காம எரிக்கு என் மேனி தாங்கா தொழியும், காண். எ.று.
பூவெனப் பொதுப்பட மொழிதலால் தாமரைக்காயிற்று. “பூவினுக் கருங்கலம் பொங்கும் தாமரை” என்பர் சான்றோர். போற்றுதல்: ஈண்டு வணங்குதல் மேற்று. வழுத்தல் - துதித்தல். கழல்: ஆகு பெயரால் திருவடிக்காயிற்று. சே - எருது. “சேவேறித் திரிவீர்” (நாகைக்) என்பர் நம்பியாரூரர். தேமேல் அலங்கல் - தேன் மிக்க மலர்மாலை. தோளை யணையுங்கால் கொங்கைகள் குழைந்து இன்பம் செய்வதால் “முலையழுந்தச் சேர்ந்தாலன்றி” என்றும், காம வெப்பம் தணியாது என்றற்குச் “சித்தசன் கைத்து ஆம் அழற் பூவிற்குத் தாழாது” என்றும் கூறுகிறாள். சித்தசன் - காமவேள். கைத்தாம் பூ. அழற் பூ என இயையும். கையதாகிய மலரம்பு காம வெப்பத்தை யுண்டு பண்ணுவதாலின் “சித்தசன் கைத்தாம் அழற்பூ” என்று விளம்புகிறாள். கொங்கைகள் அழுந்தத் தோளையணையாவிடின் காம வெம்மைக்கு ஆற்றேனென்பாளாயினாளாம். (2)
|