1658. ஆரா அமுதாய் அன்புடையோர்
அகத்துள் இனிக்கும் அற்புதனார்
தீ்ரா வினையும் தீர்த்தருளும்
தெய்வ மருந்தார் சிற்சபையார்
பாரார் புகழும் திருஒற்றிப்
பரமர் தமது தோள்அணையத்
தாரார் இன்னும் என்செய்கேன்
சகியே இனிநான் சகியேனே.
உரை: உண்ணப்படாத அமுதமாய், அன்பர் மனத்துள் இன்பமுறும் அற்புதனாகுபவரும், தீராத வினைப்பிணிப்பைத் தீர்த்துதவும் தெய்வ மருந்தாகுபவரும், சிற்றம்பலத்தில் உள்ளவரும், நிலத்தவர் புகழ்ந்து போற்றும் திருவொற்றியூர்ப் பரமனுமாகிய சிவபெருமானுடைய தோள்களை நான் அணைந்து மகிழ இப்பொழுதும் அருளுகின்றாரில்லை; ஆற்றாமை மேலிடுதலால் என்ன செய்வேன். எ.று.
ஆர்தல் - உண்டல்; எத்தனை முறை எவ்வளவுண்ணினும் ஆர்வ மடங்காத அமுதென்றற்கு “ஆராவமு” தென்றலு முண்டு. நினைக்கும் மெய்யன்பர் உள்ளத்தில் தேனூற இன்புறுத்தலால், “அன்புடையோர் அகத்துள் இனிக்கும் அற்புதனார்” எனக் கூறுகிறாள். “சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்” (சிவபு) என மணிவாசகனாரும், “எண்ணித் தம்மை நினைத்திருந்தேனுக்கு, அண்ணித்திட்டமுதூறு மென்னாவுக்கே” (வெண்ணி) எனத் திருநாவுக்கரசரும் கூறுதல் காண்க. பிறப்புத் தோறும் விடாது தொடர்வது பற்றிச் செய்வினையைத் “தீராவினை” என்றும், இறைவன் பொருள் சேர் புகழை நினைவார்க்கு அவ்வினையும் வலியிழந்து கெடுதலால், “தீரா வினையும் தீர்த்தருளும் தெய்வ மருந்தார்” என்றும் செப்புகின்றாள். “இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு” என்பது திருக்குறள். “மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித் தீரா நோய் தீர்த்தருள வல்லான்” (புள்ளிருக்கு) எனப் பெரியோர் கூறுகின்றனர். உலகியல் மருந்தன்மை புலப்படுத்தற்குத் “தெய்வ மருந்தார்” என்கிறாள். சிற்சபை - சிற்றம்பலம்; ஞான சபை என்பதுமுண்டு. பார் - நிலவுலகம். தன்பாற் போந்து தான் பற்றி அணைந்து மகிழுமாறு இறைவன் தமது திருமேனியைத் தருகின்றாரில்லை என வருந்துகின்றாளாகலின், “தமது தோளணையத்தாரார்” எனவும், அதனால் வேட்கை மிக்கு ஆற்றாமை நல்குவது நினைந்து, “என் செய்கேன் இனி நான் சகியேன்” எனவும் உரைக்கின்றாள். தன்னை நினைக்கத் தருவது போலத் திருமேனியை அணைந்து இன்புறத் தாராமைக்கு நங்கை வருந்துகிறாள் என்க. (4)
|