166. பிச்சை யேற்றவன் பிள்ளைநீ யெனில்
இச்சை யேற்றவர்க் கியாது செய்குவாய்
பச்சை மாமயில் பரம நாதனே
கச்சிநேர் தணிகைக் கடம்பனே.
உரை: கச்சிப் பதியை யொக்கும் தணிகைப் பதியையுடைய கடம் பணிந்த முருகப் பெருமானே, பச்சை நிறமுடைய மயிலேறும் பரம நாதனே, பிச்சை யெடுக்கும் சிவனுக்கு மகன் என்று சொல்லுவாயாயின், நினது அன்பு வேண்டி இறைஞ்சுபவர்க்கு என்ன செய்குவாய், எ. று.
கச்சிப்பதி - காஞ்சி மாநகர். அங்கே முருகனுக்குக் குமரக் கோட்டம் என்றொரு கோயிலுண்டாகலின், அதனைத் தணிகைக்கு உவமம் செய்கின்றார். கடம்பின் பூவாலாகிய மாலை யணிவது பற்றி முருகனுக்குக் கடம்பன் என்ற பெயர் எய்திற்றென அறிக. பன்னிற முடையதாயினும் மயிலின்பாற் பச்சை நிறம் மிக்குத் தோன்றுதலால் “பச்சை மாமயில்” என விதந்து கூறுகின்றார். பரமநாதன்-மேலான தலைவன். பரம பதத்துக்குத் தலைவன் என்று கூறுவதுமாம். சிவன் ஊர்தொறும் சென்று பலி யேற்பவன் என்று புராணங்கள் கூறுவது கொண்டு, “பிச்சை யேற்றவன் பிள்ளைநீ எனில்” என்று மொழிகின்றார். “கச்சி மூதூர்க் காமக் கோட்ட முண்டாக நீர் போய் ஊரிடும் பிச்சை கொள்வது என்னே” (ஓணகாந்தன்) என்று சுந்தரர் பாடுவது காண்க. உன்னைப் பிச்சை யேற்பவன் மகன் என்பார் உளராயினும், உனது திருவருள் வேண்டி இரப்பவருளராகலின் அவர்கட்கு அவர்களை மறுத்தல் கூடாதென்றற்கு “இச்சை யேற்றவர்க்கு யாது செய்குவாய்” எனக் கேட்கின்றார்.
இதனால், நீ எப்பெற்றியனாயினும் உன்பால் இரப்பவர்க்கு உனது இன்னருளைத் தந்தேயாக வேண்டும் என வற்புறுத்தியவாறாம். (16)
|