1660. எங்கள் காழிக் கவுணியரை
எழிலார் சிவிகை ஏற்றிவைத்தோர்
திங்கள் அணியும் செஞ்சடையார்
தியாகர் திருவாழ் ஒற்றியினார்
அங்கள் அணிபூந் தார்ப்புயத்தில்
அணைத்தார் அல்லர் எனைமடவார்
தங்கள் அலரோ தாழாதென்
சகியே இனிநான் சகியேனே.
உரை: தோழி, நாங்கள் பரவும் சீர்காழிக் கவுணியர் குலத்து ஞானசம்பந்தரை அழகு நிறைந்த சிவிகை தந்து அதன்மேல் இவர்வித்தவரும், பிறைத் திங்கள் அணியும் சிவந்த சடையையுடையவரும், தியாகப்பெருமானும், திருவொற்றியூரை யுடையவருமாகிய சிவபெருமான் இனிய தேன்பொருந்திய பூமாலையணிந்த தோளில் என்னையணைத்துச் சேர்ந்தாரில்லை; அதனையறிந்த ஏனைய மகளிர் பேசும் அலர் குறைவதாக இல்லை; இனிமேல் என் தனிமைத் துயரைப் பொறேன். எ.று.
திருஞானசம்பந்தர்பால் உள்ள தனது அன்பு மிகுதி தோன்ற “எங்கள் காழிக் கவுணியர்” எனப் புகல்கின்றாள். காழி - சீர்காழி. ஞான சம்பந்தர் பிறந்தது கவுணியர் குலமாதல் பற்றிக் “கவுணியர்” என்று கூறுகின்றாள். திருவறத்துறையில் முத்துச் சிவிகை தந்து திருஞானசம்பந்தரை அதனையூர்ந்து செல்லச் சிறப்பித்த வரலாறு விளங்க, “காழிக் கவுணியரை எழிலார் சிவகை ஏற்றுவித்தார்” என உரைக்கின்றாள். பிறைத் திங்களைச் சடைமுடியிற் கொண்டவராதலால், “திங்களணியும் செஞ்சடையார்” என்று குறிக்கின்றார். திங்கட்பிறைக்கு நலமுண்டாகச் சிவன் சடையில் தாங்கிக்கொண்டாராயினும், அப்பிறையால் சடைமுடி ஒருவகை அழகுறுதலின் “திங்களணியும் சடை” யென்றும், மின்னற் கொடிபோல் சிவந்த ஒளியுடைமைபற்றிச் “செஞ்சடை” யென்றும் சிறப்பிக்கின்றாள். அங்கள் - இனிய தேன். தேன் றிறைந்த மலர் மாலைகள் கிடக்கும் தோள் என்றற்கு “அங்கள் அணி பூந்தார்ப் புயம்” என உரைக்கின்றாள். தோள் தோய்ந்தின்பம் செய்யாமையால் என் வேறுபாடு கண்டு ஏனை மகளிர் அலர் தூற்றுவதால் யான் ஆற்றேனாயினேன் என்பாள், “இனி நான் சகியேன்” என இசைக்கின்றாள். தாழாது - குறையாதாயிற்று. (6)
|