1661.

     காவி மணந்த கருங்களத்தார்
          கருத்தர் எனது கண்அனையார்
     ஆவி அனையார் தாய்அனையார்
          அணிசேர் ஒற்றி ஆண்தகையார்
     பூவின் அலங்கல் புயத்தில்எனைப்
          புல்லார் அந்திப் பொழுதில்மதி
     தாவி வருமே என்செயுமோ
          சகியே இனிநான் சகியேனே.

உரை:

      தோழி, கருங்குவளை போன்ற கரிய கழுத்தையுடையவரும், அன்பர் கருத்தில் எழுந்தருள்பவரும், எனது கண்போன்றவரும், உயிரொப்பவரும், தாய்போல் தலையளிப்பவரும், அழகிய ஒற்றியூரை யுடைய ஆண்டகையுமாகிய சிவபெருமான், பூமாலையணிந்த தோளால் என்னைச் சேராராயினாராதலின், மாலைப்போதில் முழுமதியம் தாவி யெழுந்து எங்ஙனம் வருத்துமோ; யான் ஆற்றேனாவேன். எ.று.

     காவி - கருங்குவளை. களம் - கழுத்து. கருத்தர் என்பதை வடசொற் சிதைவாகக் கொண்டு தலைவர் என்றலுமொன்று. ஒளி நல்குதலின் “கண்ணனையார்” என்றும், உணர்வளித்தலின் “ஆவியனையர்” என்றும், தலையளிப்பது விளங்கத் “தாயனையார்” என்றும், தன்போல் மகளிராற் காதலிக்கப்படும் சிறப்புப்பற்றி “ஆண்டகையா” ரென்றும் இயம்புகின்றாள். பூவினலங்கல் - பூமாலை. புல்லுதல் - முயங்குதல். காம நோயால் வெம்புவார்க்கு மாலைப்போதில் முழு மதியின் தண்ணிலவு மிக்க வருத்த மெய்துவிக்குமாதலின், “அந்திப் பொழுதின் மதி தாவி வருமே” என்று துயர்கின்றாள். விரக நோய் மிகுதியை ஆற்றாமை புலப்பட, “இனி நான் சகியேன்” என இயம்புகின்றாள்.

     (7)