1662. மலஞ்சா திக்கும் மக்கள்தமை
மருவார் மருவார் மதில்அழித்தார்
வலஞ்சா திக்கும் பாரிடத்தார்
மாலும் அறியா மலர்ப்பதத்தார்
நிலஞ்சா திக்கும் ஒற்றியினார்
நினையார் என்னை அணையாமல்
சலஞ்சா தித்தார் என்னடிஎன்
சகியே இனிநான் சகியேனே.
உரை: தோழி, மலவிருளாற் பிணிப்புற்ற மக்களைச் சேராதவரும் பகைவரான திரிபுரத்தசுரர் மதிலையழித்தவரும், வன்மை கொண்ட பூத கணங்களையுடையவரும், திருமாலறியாத திருவடியை யுடையவரும், நில வுலகத்தவர் போற்றும் திருவொற்றியூரை யுடையவருமான தியாகப் பெருமான் என்னை நினைந்து போந்தருளிக் கூடி மகிழ்விக்காமல் பிடிவாதம் செய்கின்றாராகலின், நான் என்ன செய்வேன்; வேட்கை மிகுதியால் ஆற்றே னாகின்றேன். எ.று.
மலப்பிணிப்புக்களால் அறியாமை யிருள் சூழ்ந்து கிடக்கும் கீழ்மக்கள் மனத்தின்கட் பொருத்தாதனராகலின் “மலம் சாதிக்கும் மக்கள்தமை மருவார்” என்றும், அசுரர்களின் மூவகை மதில் சூழ்ந்த நகரத்தை எரித்தழித்தமை பற்றி, “மருவார் மதிலழித்தார்” என்றும் கூறுகின்றாள். வலம் - வலிமை. பாரிடம் - பூத கணங்கள். இக்கணங்கள் சிவனைப் பிரிவின்றிச் சூழ்ந்து கிடப்பனவாகையால், “வலம் சாதிக்கும் பாரிடத்தார்” என்று பகர்கின்றாள். திருவடியைத் தேடிக் காண மாட்டாராயினமை பற்றி, “திருமால் அறியா மலர்ப்பதத்தார்” எனத் தெரிவிக்கின்றாள். மலர்ப்பதம் - தாமரை மலர் போலும் திருவடி. நிலம், ஆகு பெயரால் நிலவுலக மக்களைக் குறிப்பது. சலம் - பிடிவாதம்; வஞ்சனையுமாம். “சலத்தாற் பொருள் செய்தே மார்த்தல்” (குறள்) என்பது காண்க. நெடிது வாராமை தோன்றச் “சலம் சாதித்தார்” என வுரைத்து, “இனி நான் சகியேன்” என்று வருந்துகிறாள். (8)
|