1663.

     நாக அணியார் நக்கர்எனும்
          நாமம்உடையார் நாரணன்ஓர்
     பாகம் உடையார் மலைமகள்ஓர்
          பாங்கர் உடையார் பசுபதியார்
     யோகம் உடையார் ஒற்றியுளார்
          உற்றார் அல்லர் உறுமோக
     தாகம் ஒழியா தென்செய்கேன்
          சகியே இனிநான் சகியேனே.

உரை:

      தோழி, பாம்புகளைப் பூணாரமாக வுடையவரும், நக்கரென்ற திருப்பெயரை யுடையவரும், நாரணனை ஒருபாகத்திலும் பார்வதியை ஒருபாகத்திலும் உடையவரும், பசுபதியானவரும், சிவயோகமே புரிபவரும், திருவொற்றியூரி லுள்ளவருமான சிவபெருமான் என்னை அடையவில்லை; எனக்குற்ற வேட்கைப் பெருக்கமும் நீங்காதாயிற்று; அதனால் நான் ஆற்றேனாகின்றேன். எ.று.

     நாக வணி - பாம்பாபரணம். நக்கன், சிவனுக்குரிய பெயர்களில் ஒன்று. “நக்கன் காண் நச்சரவம் அரையிலார்த்த நாதன்காண்” (சிவபு) என்று திருநாவுக்கரசர் பாடுவது காண்க. “அரியலால் தேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே” (ஐயா) எனச் சான்றோர் உரைப்பதால், “நாரணனோர் பாகமுடையார்” என நவில்கின்றாள். மலைமகள் - மலையரசன் மகளாகிய பார்வதி. பாங்கர் - பக்கம். பசுபதி - உயிர்கட்குத் தலைவன் எனப் பொருள்படும் சிவன் திருப்பெயர்களிலொன்று. சிவ யோகத்தை புரிவது பற்றிச் சிவனை “யோகமுடையார்” என்கிறாள். “நல்லூர்ப் பெருமணத்தான் நல்ல போகத்தான் யோகத்தையே புரிந்தான்” (நல்லூர்ப்) என்று ஞானசம்பந்தர் எடுத்தோதுகின்றார்: உற்றாரல்லர் - என்பால் வந்து கூடுகின்றாரில்லை. மோக தாகம் - காதல் வேட்கை. வேட்கை பெருகி நிற்றலால் கையறவுற்று வருந்துகிறேன் என்பது குறிப்பு.

     (9)