90. திருக்கோலச் சிறப்பு
தலைவி வியத்தல்
அஃதாவது
திருவுலாப் போதரும் திருவொற்றியூர்ச் சிவபெருமானது பேரழகைப் பெருந்திணை நங்கை கண்டு வியந்து
சிறப்பித்துக் கூறுவதாம். இதன்கண் நங்கை தோழிக்குரைப்பாளாய், பெருமான் பேரழகு
மனமொழிகளின் எல்லை யிறந்து மிகுவதும், உலகை மறந்து உள்ளத்தாற் காணத்தகுவதாவதும், தேவர்
முனிவர்களால் எழுதலாகா அருமையுடைமையும், கண்டார் மனத்தைக் கவர்ந்து அவருடைய கருவி கரணங்களை
விழுங்குமென்பதும், கண்டார் மனத்தை மீளாவாறு பிணிக்குமியல்பும், இளமகளிர் வேட்கை மீதூர்ந்து
மெய்மறந்து கலை யிழந்து வருந்தினமையும் பிறவும் ஓதப்படுகின்றன.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1666. பொன்னென் றொளிரும் புரிசடையார்
புனைநூல் இடையார் புடைஉடையார்
மன்னென் றுலகம் புகழ்ஒற்றி
வாணர் பவனி வரக்கண்டேன்
மின்னென் றிலங்கு மாதரெலாம்
வேட்கை அடைய விளங்கிநின்ற(து)
இன்னென் றறியேன் அவரழகை
என்னென் றுரைப்ப தேந்திழையே.
உரை: உயர்ந்த அணிகளை யணிந்த தோழி, பொன்போல் திகழ்கின்ற சடையை யுடையவரும், நுண்ணிய நூல்போலும் இடையை யுடைய உமாதேவியை ஒருபாகத்தே யுடையவரும், பெருமையுடையதென உலகவர் புகழும் திருவொற்றியூர் வாழ்நருமாகிய தியாகப் பெருமான் திருவுலா வரக் கண்டேனாக, மின்போல் விளங்கும் மகளிரெல்லாரும் வேட்கை மேலிட்டு விளங்கி நின்றது இன்ன காரணமென அறியேனாயினேன்; அங்கே மகளிரை இன்புறுத்திய அவரது திருமேனி யழகை என்னென்று சொல்வது. எ.று.
சிவன் சடை பொன்னிறத்ததாகலின், “பொன்னென் றொளிரும் புரிசடையார்” என்றும், உமைநங்கையின் இடை நலத்தைச் சிறப்பிக்கப் “புனைநூல் இடையார்” என்றும் புகழ்கின்றாள். புனைநூல் - நுண்ணிதாக இழைக்கப்பட்ட நூல். புடை - பக்கம்; ஈண்டு இடப்பாகத்தின் மேற்று. மன் - பெருமை; நிலைபேறெனினும் அமையும். வாழ்நர் - வாணர் என மருவிற் றென்றுமாம். பவனி - உலா. மின்னல் போன்ற இடை யுடைமையால் மகளிர் மின்னென விளங்குவது பற்றி, “மின்னென் றிலங்கும் மாதர்” என விளம்புகிறாள். திருவுலாவில் தியாகப்பெருமானது திருமேனி நலத்தில் மகளிரனைவரும் கருத்தையிழந்து வேட்கை வயத்தரானதை நன்கறிந்தமை புலப்பட, “மாதரெலாம் வேட்கையடைய விளங்கி நின்ற” தென விளம்புகிறாள். ஒருசேர இளமகளிரெல்லாம் வேட்கை யுருவினரானது வியப்பை விளைவித்தமையின், “இன்னென்றறியேன்” என்றும் அவரது திருமேனியழகு காரணமாமெனத் தெளிந்து, “அவரழகை என்னென் றுரைப்பது” என்றும் இயம்புகிறாள்.
இதனால், தியாகப் பெருமானது திருவுலாவில் அவரது அழகைக் கண்ட மகளிரனைவரும் வேட்கையுருவினரானது கண்டு வியந்தவாறாம். (1)
|