1667.

     அள்ளிக் கொடுக்கும் கருணையினார்
          அணிசேர் ஒற்றி ஆலயத்தார்
     வள்ளிக் குவந்தோன் தனைஈன்ற
          வள்ளல் பவனி வரக்கண்டேன்
     துள்ளிக் குதித்தென் மனம்அவரைச்
          சூழ்ந்த தின்னும் வந்ததிலை
     எள்ளிக் கணியா அவரழகை
          என்னென் றுரைப்ப தேந்திழையே.

உரை:

      ஏந்திழையே, திருவருட் செல்வத்தை வரையாது வாரி வழங்கும் அருளாளரும், அழகுமிக்க திருவொற்றியூர்த் திருக்கோயிலில் எழுந்தருள்பவரும், வள்ளிநாயகியைக் காதலித்தவனாகிய முருகனைப் பெற்ற வள்ளலுமாகிய தியாகப் பெருமான் திருவுலா வரக் கண்டேனாக, என் மனம் துள்ளிக் குதித்துச் சென்று அவரைச் சுற்றிக்கொண்டு நிற்பது இன்னும் என்பால் வரவில்லை; இகழ்ந்து ஒதுக்கலாகாத அவருடைய அழகை என்னவென்று சொல்வது. எ.று.

     திருவருள் செல்வம் எனப்படுவதால், சிவனது அருள் வழங்கும் நலத்தை “அள்ளிக் கொடுக்கும் கருணையினார்” எனப் போற்றுகின்றாள். வள்ளி நாயகியைக் காதலித்து மணந்துகொண்ட சிறப்பு விளங்க, முருகனை “வள்ளிக் குவந்தோன்” என்றும், அவனைப் பெற்றருளிய பெருமை பிறங்க, “வள்ளிக் குவந்தோன் தனையீன்ற வள்ளல்” என்றும் எடுத்தோதுகின்றாள். தியாகப் பெருமான் மேனியைத் திருவுலாவிற் கண்ட மாத்திரையே கருத்தைப் போக்கிக் காதல் மிக்கமை தோன்ற, “துள்ளிக் குதித்து என் மனம் அவரைச் சூழ்ந்தது, இன்னும் வந்ததிலை” என இசைக்கின்றாள். சூழ்தல் - சுற்றி வருதல். எள்ளிக் கணியா அழகு - திரு இகழ்ந்து புறக்கணிக்க லாகாத பேரழகு. கணித்தல் - புறக்கணித்தல் மேற்று.

     இதனால், தியாகப் பெருமானது அழகு மனத்தைப் பிணித்து, விடலாகாத பெருமையுடைய தெனக் கண்டவாறாம்.

     (2)