1669.

     கொழுதி அளிதேன் உழுதுண்டும்
          கொன்றைச் சடையார் கூடலுடை
     வழுதி மருகர் திருஒற்றி
          வாணர் பவனி வரக்கண்டேன்
     பழுதில் அவனாந் திருமாலும்
          படைக்குங் கமலப் பண்ணவனும்
     எழுதி முடியா அவரழகை
          என்னென் றுரைப்ப தேந்திழையே.

உரை:

      ஏந்திழையாகிய தோழி, வண்டுகள் மலரிதழைக் கோதிக் கிளறித் தேனையுண்ணும் கொன்றைக் கண்ணியணிந்த சடையை யுடையவரும், மதுரை நகரையுடையபாண்டி வேந்தர்க்கு மருகரானவரும் திருவொற்றியூரில் வாழ்நருமான தியாகப் பெருமான், திருவீதி உலா வரக் கண்டேன்; குற்றமில்லாத தேவராகிய திருமாலும், உலகைப் படைக்கும் தாமரை மலரில் எழுந்தருளும் தேவனாகிய பிரமனும் எழுதலாகாத அப்பெருமான தழகை என்னென்றுரைப்பேன். எ.று.

      வண்டுகள், கொன்றை மலரின் இதழ்களை நெகிழ்த்து விரித்துத் தேன்பருகும் இயல்பினவாதலின், “கொழுதி யளிதேன் உழுதுண்ணும் கொன்றைச் சடையார்” என்று கூறுகின்றாள். கொழுதுதல் - கோதுதல். அளி - வண்டு. கூடல் - மதுரை நகர். வழுதி - பாண்டியன். மலயத்துவசன் மகளான தடாதகையை மணந்து மருகனாயின வரலாறு பற்றி, “கூடலுடை வழுதி மருகர்” எனக் குறிக்கின்றாள். பழுது - குற்றம். கமலம் - தாமரை பண்ணவன் - தேவன். எழுதுதல் - ஓவியத்தில் உருவெழுதுதல்.

     இதனால், தியாகேசர் பேரழகு திருமால் பிரமர்களாலும் எழுதப்படாத பெருமையுடைய தென்பதாம்.

     (4)