167.

    கடப்ப மாமலர்க் கண்ணி மார்பனே
    தடப் பெரும்பொழில் தணிகைத் தேவனே
    இடப்படாச் சிறியேனை யன்பர்கள்
    தொடப் படாதெனில் சொல்வ தென்கொலோ.

உரை:

     பெரிய பொழில்கள் நிறைந்த தணிகைப் பதியில் எழுந்தருளும் தேவனே, கடம்பு மலர்களால் தொடுக்கப் பட்ட மாலை யணிந்த மார்பை யுடையவனே, அன்பர்கள் சூழலில் இடம் பெறாத சிறுமையுடைய என்னை நீ தீண்டலாகாது என்று அவ்வன்பர்கள் சொல்லுவார்களாயின் நீ யாது சொல்வாயோ? எ. று.

     கடம்பு மலர், கடப்ப மலர் என வந்தது. கண்ணி யென்பது தலைக்கணியும் மாலைக்குச் சிறப்புப் பெயராயினும் ஈண்டு மார்பிலணியும் மாலை மேற்று. தடப் பெரும் பொழில், உயர்ந்தோங்கு மலை என்றாற் போல வந்தது. தட, பெருமை குறிக்கும் உரிச்சொல். இடம்படாச் சிறுமை, இடப்படாச் சிறுமை என எதுகை நோக்கி வலித்தது. பெருமை சான்ற அன்பர் சூழலில் சிறியவர் இடம் பெறல் இன்மையின் “இடப்படாச் சிறியேன்” என்றும், சிறுமை மிக்காரைப் பெருமை யுடையோர் தீண்ட விரும்பாராதலால் “அன்பர்கள் தொடப்படாது எனில்” என்றும், அவர் கட்கு யாது சொல்லி அமைதி செய்வாய் என்பாராய்ச் “சொல்வது என்கொலோ” என்றும் வினவுகின்றார்.

     இதனால், நின்பால் அன்புடைய பெரியவர்கள் என் சிறுமை கண்டு நின்னைத் தடுப்பராயின் என்ன செய்வது என்று முறையிட்டவாறாம்.

     (17)