1670. புன்னை இதழிப் பொலிசடையார்
போக யோகம் புரிந்துடையார்
மன்னும் விடையார் திருஒற்றி
வாணர் பவனி வரக்கண்டேன்
உன்னும் உடலம் குளிர்ந்தோங்க
உவகை பெருக உற்றுநின்ற
என்னை விழுங்கும் அவரழகை
என்னென் றுரைப்ப தேந்திழையே.
உரை: தோழியாகிய ஏந்திழையே, புன்னை மலரும் கொன்றைக் கண்ணியும் அணிந்து விளங்கும் சடையையுடையவரும், போக யோகங்களை விரும்பிச் செய்தலுடையவரும், பெரிய எருதை ஊர்தியாகக்கொண்டவரும், திருவொற்றியூரில் எழுந்தருள்பவருமான தியாகப் பெருமான் திருவுலா வரக் கண்டேன்; பேணப்படும் உடம்பு குளிர்ப்பெய்தவும், உவகை பெருகவும், உற்று நோக்கி நின்ற என்னை முழுதும் கவர்ந்து கொண்ட அவரது பேரழகை என்னென்று சொல்லுவேன். எ.று.
புன்னை - புன்னை மரம். இதழி - கொன்றை மலர். இவற்றின் மலர்களால் வனப்பு மிக்குத் தோன்றுதலால், “பொலி சடையார்” என்று புகழ்கின்றாள். உலகுயிர்கட்குப் புவன போகங்களையும் ஞானயோகிகட்கு யோகப் பயனையும் நல்குவது பற்றி, “போக யோகம் புரிந்துடையார்” என உரைக்கின்றாள். “போகியாய் இருந்துயிர்க்குப் போகத்தைப் புரிதலோரார், யோகியால் யோகமுத்தியுதவுதலதுவும் ஓரார்” (சிவ. சித்தி : 1 : 50) என்று பெரியோர் கூறுவதறிக. மன் - பெருமை. உம்மை; இசை நிறை. விடை - எருது; நிலைபெற்ற அறவடிவாகிய விடையெனினும் அமையும். உன்னுதல் - நினைத்தல்; ஈண்டு நினைந்து பேணுதல் மேற்று. வேட்கையால் வெம்மையுறுவது புலப்பட, “உடலம் குளிர்ந் தோங்க” என்றும், காட்சியின்பம் பெருகுதலால் “உவகை பெருக” என்றும், தன்னை மறத்தல் தோன்ற, “உற்று நின்ற என்னை விழுங்கும் அவரழகு” என்றும் இயம்புகிறாள்.
இதனால், தியாகேசர் பேரழகு தன்னை முற்றும் கவர்ந்து கொண்டமை யுரைத்தவாறாம். (5)
|