1672. நீர்க்கும் மதிக்கும் நிலையாக
நீண்ட சடையார் நின்றுநறா
ஆர்க்கும் பொழில்சூழ் திருஒற்றி
வாணர் பவனி வரக்கண்டேன்
பார்க்கும் அரிக்கும் பங்கயற்கும்
பன்மா தவர்க்கும் பண்ணவர்க்கும்
யார்க்கும் அடங்கா அவரழகை
என்னென் றுரைப்ப தேந்திழையே.
உரை: தோழியாகிய ஏந்திழையே, கங்கைக்கும் பிறைமதிக்கும் நிலைத்த இடமாக நீண்ட சடையை யுடையவரும், தேன்சொரியும் சோலைகள் சூழ்ந்த திருவொற்றியூரை யுடையவருமாகிய தியாகப் பெருமான் திருவுலா வரக் கண்டேன்; பாரில் வாழும் மக்கட்கும் திருமாலுக்கும் பிரமனுக்கும் பலராகிய முனிவர்கட்கும் தேவர்கட்கும் யாவர்க்கும் முற்றவும் கண்டு அமைய முடியாத அவரது பேரழகை என்னெனக் கூறுவேன். எ.று.
நீர் - கங்கை. மதி - பிறைச்சந்திரன். கங்கையாறு பெருகி யோடாது நிற்றற்கும், பிறைமதி தேயாமல் விளங்குதற்கும் சிறந்த இடமாவது விளங்க, “நீர்க்கும் மதிக்கும் நிலையாக நீண்ட சடையார்” என்று புகல்கின்றாள். நறா - தேன்; ஆர்த்தல் - சொரிதல். பார் - நிலவுலகம்; ஆகு பெயரால் நிலவுலக மக்கட்காயிற்று. பங்கயன் - தாமரை மலரிலிருக்கும் பிரமன். பண்ணவர் - தேவர்கள்.
இதனால், தியாகப் பெருமான் பேரழகு தேவர் முனிவர் திருமால் பிரமன் ஆகிய எவர்க்கும் காண்பரிது என வியந்தவாறாம். (7)
|