1674. கண்ணன் அறியாக் கழற்பதத்தார்
கண்ணார் நெற்றிக் கடவுள்அருள்
வண்ணம் உடையார் திருஒற்றி
வாணர் பவனி வரக்கண்டேன்
நண்ண இமையார் எனஇமையா
நாட்டம் அடைந்து நின்றனடி
எண்ண முடியா அவரழகை
என்னென் றுரைப்ப தேந்திழையே.
உரை: ஏந்திழையே, திருமாலறியாத கழலணிந்த திருவடியை யுடையவரும், கண் பொருந்திய நெற்றியை யுடையவரும், திருவொற்றியூரில் எழுந்தருள்பவருமாகிய தியாகப் பெருமான் தெருவில் திருவுலா வரக் கண்டேன்; திருவுருக்காட்சியைப் பெற இமையவர்களைப் போலக் கண்ணிமைக்காமல் திறந்த விழியுடன் நின்றேன்; நினைக்க முடியாத அவரது பேரழகை என்னென்பேன்! எ.று.
கரிய நிறமுடையவனாதல் பற்றித் திருமாலுக்குக் கண்ணன் என்பதும் ஒரு பெயர். கழலணிந்த பாதம் - கழற் பதமென வந்தது. கழல் - வீரரணியும் காலணி; இதனை வீரகண்டை என்றலுமுண்டு. கடவுள் - ஈண்டுத் தேவர் என்னும் பொருளதாம். அருளே திருமேனியாகக் கொண்டவராதலின், சிவனை “அருள் வண்ணமுடையார்” என அறிவிக்கின்றாள். நண்ணல் - திருவுருவின் நலமனைத்தும் இனிது காண்டற்கு அருகணைதல். இமையார் - கண்ணிமைத்தல் இல்லாத தேவர்கள். இமையா நாட்டமடைதல் - கண்கள் இமையாதவாறு தடுத்துக் கொண்டு பரக்கத் திறந்த விழியுடன் பார்த்தல். நின்றனன் எனற்பாலது, சாரியையின்றி நின்றன் என வந்தது.
இதனாற், கண்ணிமையாவாறு தடுத்து நோக்கினும் தியாகப் பெருமான் பேரழகு எண்ண முடியாத தென்பதாம். (9)
|