1675.

     மாழை மணித்தோள் எட்டுடையார்
          மழுமான் ஏந்தும் மலர்க்கரத்தார்
     வாழை வளஞ்சூழ் ஒற்றியூர்
          வாணர் பவனி வரக்கண்டேன்
     யாழை மலைக்கும் மொழிமடவார்
          யாரும் மயங்கிக் கலைஅவிழ்ந்தார்
     ஏழை யேன்நான் அவரழகை
          என்னென் றுரைப்ப தேந்திழையே.

உரை:

      ஏந்திழையையுடைய தோழி, பொன்னிறமுடைய அழகிய தோள்கள் எட்டு உடையவரும், மழுப்படையும் மானும் ஏந்தும் கைகளை யுடையவரும், வாழை மரங்கள் வளரும் வளம் பொருந்திய திருவொற்றியூரில் எழுந்தருளு கின்றவருமான தியாகப் பெருமான் திருவுலா வரக் கண்டேன்; இனிமையால் யாழிசையை வெல்லும் மொழி வழங்கும் இளமகளிர் யாவரும் கண்டு கருத்திழந்து மயங்கி ஆடையவிழ்ந்து அல்லலுற்றனர்; ஏழையாகிய யான் அவருடைய பேரழகை என்னென்று கூறுவேன். எ.று.

     மாழை - பொன். மணித்தோள் - அழகிய தோள்கள். சிவனுக்குத் தோள் எட்டென்பதை “எண் தோள் வீசி நின்றாடும் பிரான்” (அங்க) என நாவுக்கரசர் பாடுவது காண்க. மலர்க் கரம் - மலர் போன்ற கை. யாழ் என்றது யாழிற் பிறக்கும் இனிய இசை. மலைதல் - பொருதல்; ஈண்டு ஒப்புப் பொருட்டு. மடவார் - இளமகளிர். வேட்கை மிக்கு உடம்பு சுருங்குதலால் உடை நெகிழ்தல் இயல்பாகலின், “கலையவிழ்ந்தார்” என வுரைக்கின்றாள். ஏழைமை - அறிவின்மை.

     இதனால், தியாகப் பெருமான் அழகு கண்ட மகளிர் மெய் வேறுபட்டுக் கலையிழந்த வசமாயினமை கூறியவாறாம்.

     (10)