91. சோதிடம் நாடல்

தலைவி கழிமிகு காதல்

திருவொற்றியூர்

    அஃதாவது, பெருந்திணைத் தலைவி தன் காதலுள்ளத்தெழுந்த கருத்துக்கள் கருதியவாறு கைகூடுமோ என அசைவும் அலமரலும் உற்றுச் சோதிடம் பார்த்துரைக்கும் வேதியர்களை வினாவுவதாம். குற மகளிர் குறியாராய்ந்து கூறுவதுபோலச் சோதிடர் நாளும் கோளும் நோக்கி நிகழ்வது எண்ணியுரைப்பர். வராகமிகிரர் காலத்திலிருந்து சோதிடம் பார்க்கும் நெறி நமது நாட்டில் மக்களிடையே நிலவுகிறது. இதன்கண் திருவொற்றியூர்த் தியாகப் பெருமானைக் காதலித்தொழுகும் பெருந்திணை நங்கை காதற் புணர்ச்சியை விழைந்து இன்று வருவாரோ, சிற்றம்பலத்திலோ திருவொற்றியூரிலோ எவ்விடத்திற் கூடுவாரோ என்பன போன்ற எண்ணங்களை எடுத்தோதிச் சோதிடரைக் கேட்கின்றாள். தொடக்கத்தில் வேதியர்களே சோதிடம்பார்க்கும் தொழிலைமேற் கொண்டிருந்தமையின் அவர்களையே இப்பாட்டில் போற்றி வினவுகிறாள்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1676.

     பொன்னஞ் சிலையால் புரம்எரித்தார்
          பொழில்சூழ் ஒற்றிப் புண்ணியனார்
     முன்நஞ் சருந்தும் முக்கணனார்
          மூவர் அறியா முதல்வர்அவர்
     இன்னஞ் சிலநாள் சென்றிடுமோ
          இலதேல் இன்று வருவாரோ
     உன்னஞ் சிறந்தீர் சோதிடம்பார்த்
          துரைப்பீர் புரிநூல் உத்தமரே.

உரை:

      நிமித்தம் கண்டுரைப்பதில் சிறப்புடைய புரிநூல் பூண்ட வேதியரே, பொன் மலையை வில்லாக வளைத்து முப்புரத்தை எரித்தழித்தவரும், சோலைகள் சூழ்ந்த திருவொற்றியூரில் எழுந்தருளும் புண்ணிய வுருவினரும், முன்னாளிற் கடலில் எழுந்த நஞ்சினையுண்ட வரும், முக்கண்களை யுடையவரும், பிரமன் முதலிய தேவர் மூவரும் அறியமாட்டாத முதல்வருமான தியாகப் பெருமான் என்பால் வருதற்கு இன்னமும் சில நாட்கள் கழிய வேண்டுமோ? இல்லையாயின் இன்றே வருவாரோ? சோதிடம் கூறுமின். எ.று.

     உன்னம் உரைப்பது - நிமித்தம் கொண்டு எதிரில் நிகழவிருப்பதுரைத்தல். இன்னது நிகழ்வதாயின் இப்பகுதி தளிர்விட்டுத் தழைக்க என உன்ன மரங்களை வேண்டுவது; இதனை “உன்னநிலை” என்று தொல்காப்பியர் (புறத். 5) கூறுவர். சான்றோரும், “முன்னியது முடித்தோர் உன்னம் சிறக்கும் ஒள்வினை” என்பர். உன்னமரம். பொன்னிறப் பூவும் சிறுசிறு இலைகளையும் உடையது; “பொன்னன்ன பூவிற் சிறியவிலைப் புன்கால், உன்னப் பகைவ னெங்கோன்” எனப் பண்டையோர் உன்ன நிலையைப் பாடுவது காண்க. பொன்னஞ்சிலை - மேருமலையாகிய வில். புரம் - திரிபுரத் தசுரர்களின் மதில். புண்ணியன் சிவபுண்ணியப் பயனே யுருவாகியவன். முன் - கடல் கடைந்த பண்டைக்காலம். மூவர் - பிரமன், திருமால், உருத்திரனாகிய மூவர். மூவரையும் தோற்றுவித்தமைபற்றி, “மூவரறியா முதல்வர்” என்று கூறுகிறாள். “படைத் தளித்து அழிக்க மும்மூர்த்தி களாயினை” (எழுகூற்) எனத் திருஞான சம்பந்தர் உரைக்கின்றார். “சிலநாள் சென்றிடுமோ” என்பது, சில நாட்கள் அவர் வாராமையால் வறிது கழியுமோ என்னும் பொருளது. இன்மை - அன்மைப் பொருட்டு. சோதிடம் உரைப்பவர் முன்னாளில் பார்ப்பனராதலால், “சோதிடம் பார்த்துரைப்பீர் புரிநூல் உத்தமரே” என வேண்டுகிறாள். உத்தமர் - இன்னார் இனியார் என வேறுபாடு ே்நாக்காமல் நடு நிற்கும் உயர்ந்த உறவாளர்.

     இது, தலைவர் வருகை விழைந்து நங்கை வேதியரைச் சோதிடம் கேட்டவாறாம். இனி வருவனவற்றிற்கும் இதுவே கூறிக்கொள்க.

     (1)