1678. அளித்து மூன்று பிள்ளைகளால்
அகிலம் நடக்க ஆட்டுவிப்பார்
தெளித்து நதியைச் சடைஇருத்தும்
தேவர் திருவாழ் ஒற்றியுளார்
களித்து மாலை கொடுப்பாரோ
கன்னி எனவே விடுப்பாரோ
ஒளித்தொன் றுரையீர் சோதிடம்பார்த்
துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
உரை: புரிநூல் அணிந்த உத்தம வேதியரே, பிள்ளைகள் மூவரை யளித்து உலகனைத்தும் நன்கு நடைபெற இயக்குகின்றவரும், கங்கை யாற்றின் தெளிந்த நீரைச் சடையில் தேக்கிய தேவதேவரும், திருவிளங்கும் ஒற்றியூரில் எழுந்தருள்பவருமான சிவபெருமான், மனமுவந்து தமது மணமாலையை எனக்கு அணிவாரோ? அணியாமல் கன்னியாகவே கைவிடுவாரோ? ஒன்றும் மறைக்காமல் ஒரு சோதிடம் பார்த்துச் சொல்லுமின். எ.று.
பிள்ளைகள் - விநாயகர், முருகன், வீரபத்திரன் என்ற மூவர். உலகங்கட்கு இடையூறு செய்த கயமுகன், சூரவன்மன், தக்கன் முதலியோரை யழித்து, உலக வாழ்வு இனிது இயலுமாறு அவ்வப்போது இம்மூவரையும் அளித்த வரலாறு பற்றி, “அளித்து மூன்று பிள்ளைகளால் அகிலம் நடக்க ஆட்டுவிப்பார்” என்று கூறுகிறாள். பெருகி வந்த கங்கையாற்றைச் சடையில் தாங்கித் தேக்கித் தெளிவித்த செயலைச் சிறப்பித்து, “தெளித்து நதியைச் சடையிருத்தும் தேவர்” எனவுரைக்கின்றாள். செல்வ நலம் விளங்கத் “திருவாழ் ஒற்றியுளார்” என்கின்றாள். களித்தல் - உவகையுறல். கன்னி - மணமாகாத பெண். ஒளித்தல் - வாயாற் சொல்லாமல் மனத்தின்கண் மறைத்துக் கொள்ளுதல்.
இதனால், மாலையணிந்து மணப்பாரோ, மணம் புரியாமற் கைவிடுவாரோ என வினாவுவதாம். (3)
|