1679. எண்தோள் இலங்கும் நீற்றணியா
ரியார்க்கும் இறைவர் எனைஉடையார்
வண்டோ லிடும்பூங் கொன்றைஅணி
மாலை மார்பர் வஞ்சமிலார்
தண்தோய் பொழில்சூழ் ஒற்றியினார்
தமக்கும் எனக்கும் மணப்பொருத்தம்
உண்டோ இலையோ சோதிடம்பார்த்
துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
உரை: புரிநூல் அணிந்த உத்தம வேதியரே, எட்டுத் தோள்களிலும் விளங்குகின்ற திருநீறணிந்த அழகுடையவரும், எத்திறத்தார்க்கும் இறைவரும், என்னை அடிமையாக வுடையவரும், வண்டு சூழ்ந்து ஒலிக்கும் கொன்றைப் பூக்களாலான அழகிய மாலையணிந்த மார்பையுடையவரும், மனத்தில் வஞ்சனையில்லாதவரும், தட்பம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருவொற்றியூரை யுடையவருமான சிவபெருமானுக்கும் எனக்கும் திருமணம் செய்து கோடற் கேற்ற பொருத்தம் உளதோ இல்லையோ, எனக்கொரு சோதிடம் ஆராய்ந் துரைப்பீராக. எ.று.
தோள்கள் எட்டிலும் வெண்ணீறணிந்து விளங்கும் பொற்பை வியந்து, “எண்தோள் இலங்கும் நீற்றணியார்” எனக் கூறுகின்றாள். அவரவர் வினைப்பயனைக் கண்ணோடாது முறையே நுகர்விப்பது பற்றிச் சிவனை, “யார்க்கும் இறைவர்” என வுரைக்கின்றாள். “எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என மணிவாசகர் தெரிவிப்பது காண்க. எல்லாவுயிர்களையும் தனக்கு அடிமையாக வுடையவனாதலால், “எனையுடையார்” என்கின்றாள். ஓலிடுதல் - ஒலித்தல். கொன்றை மலரே அவர்க்கு மார்பிலணியும் தாராதல்பற்றி, “கொன்றையணிமாலை மார்பர்” எனப் புகழ்கின்றாள். வஞ்சமிலாத நெஞ்சத்தார்க்கு அருள் புரிபவன் வஞ்சமுடையனாதல் கூடாமையின், “வஞ்சமிலார்” எனக் கூறுகிறாள். வஞ்சிக்க வேண்டிய நினைவு செயலின்மையால் இவ்வாறு கூறுகிறாளெனினுமமையும். தட்பம் - தண்ணெனப் பெயராய் நின்றது. ஒருவனையும் ஒருத்தியையும் மணம் புணக்கலுறுபவர் பல்வகைப் பொருத்தங்களைச் சோதிடநூல் கொண்டு ஆராய்வது பிற்கால வழக்காதலால், “தமக்கும் எனக்கும் மணப்பொருத்தம் உண்டோ இல்லையோ சோதிடம் பார்த்துரைப்பீர்” என வேண்டுகிறாள்.
இது மணப்பொருத்தம் ஆராய்வதாம். (4)
|