168. என்சொல் கேனிதை எண்ணி லற்புதம்
வன்சொலேன் பிழை மதித் திடாதுவந்
தின்சொலா லிவண் இருத்தி யென்றனன்
தன்சொல் செப்பரும் தணிகைத் தேவனே.
உரை: தனது புகழ் செப்புதற் கரிதாகிய தணிகைப் பெருமானான முருகக் கடவுள் வன்சொற்களைப் பேசும் என் குற்றத்தைத் திருவுள்ளத்திற் கொள்ளாமல் உவப்புற்று இனிய சொற்களால் இங்கே இருப்பாயாக என்று பணித்தருளினான்; இதனை என்னென்பேன்; எண்ணுங்கால் இஃதோர் அற்புதமாக இருக்கிறது, எ. று.
சொல்-புகழ். எடுத்தோதற்கரிய பெருமை வாய்ந்தது முருகனது புகழ் என்றற்குத் “தன்சொல் செப்பரும் தணிகைத் தேவன்” என்று இயம்புகின்றார். இன்சொல்லிருக்க வன்சொல் வழங்குவது குற்றமாதலின், “வன்சொலேன் பிழை” எனவும், பிழை பொறுப்பது பெரியோர் இயல்பாதலால், “பிழை மதித்திடாது” எனவும், என்பால் அன்பு கொண்டு இனிய சொற்களால் “இவண் இருத்தி என்றனன்” எனவும் எடுத்துரைக்கின்றார். “இன்சொலால்” கூறியது, வன்சொல் வழங்கும் யான் இன்சொல் வழங்க வேண்டுமென அறிவுறுத்தற்கு, தணிகைத் தேவனாகிய தான் இவ்வாறு செய்ததை எண்ணுமிடத்து என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை என்பாராய், “என் சொல்கேன்” என்றும், இஃதோர் அற்புதமாக வுளது என்றற்கு “இதை எண்ணில் அற்புதம்” என்றும் சொல்லுகின்றார்.
இதனால் முருகனது திருவருள் சொல்ல வொண்ணாததாய் அற்புதமாய் இருக்கிறது என்றாராம். (18)
|