1680. தவர்தாம் வணங்கும் தாளுடையார்
தாய்போல் அடியர் தமைப்புரப்பார்
பவர்தாம் அறியாப் பண்புடையார்
பணைசூழ் ஒற்றிப் பதிஅமர்ந்தார்
அவர்தாம் மீண்டுற் றணைவாரோ
அன்றி நான்போய் அணைவேனோ
உவர்தாம் அகற்றும் சோதிடம்பார்த்
துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
உரை: முப்புரி நூலணிந்த உத்தம வேதியரே, தவச்செல்வர்கள் வணங்கிப் பரவும் திருவடியை யுடையவரும், மெய்யடியார்களைத் தாய் போற் பரிந்து காப்பவரும், பிறப்பு நெறியில் உழல்பவர் அறிய மாட்டாத பண்புடையவரும், மருத வயல் சூழ்ந்த திருவொற்றியூரில் உவந்திருப் பவருமான சிவபெருமான் தாமே இவண்போந்து என்னைக் கூடுவாரோ, அல்லது நானே சென்று அவரைக் கூடுவேனோ? மன வெறுப்பைப் போக்கி மகிழ்வுறுத்தும் சோதிடம் பார்த்து எனக்கு உரைப்பீர்களாக. எ.று.
தவர் - தவமுடைய செல்வர்கள். நற்றவம் செய்தார்க் கன்றிச் சிவபிரான் திருவடி ஞான மெய்தாதாகலின், “தவர்தாம் வணங்கும் தாளுடையார்” எனப் பராவுகின்றாள். தாயினும் நல்ல பெருமானென்று சான்றோர் புகழ்வது பற்றி, “தாய் போல் அடியர் தமைப் புரப்பார்” என வுரைக்கின்றாள். “தாயுறு தன்மையாய தலைவன்” (நாரை) என ஞானசம்பந்தர் கூறுவர். பவர் - பிறப்பிறப் புடையவர்; பிறப்புணர்த்தும் பவமென்னும் சொல்லடியாக வழங்கும் “பெயர் நிலைக் கிளவி”. பணை - மருத வயல்; இது பண்ணை என இந்நாளில் வழங்குகிறது. நான் என்னும் அகந்தை கெட்டுக் கூடுவேனோ என்றுமாம். “நான் கெட்டவா பாடித் தெள்ளேணம் கொட்டாமோ” என்று திருவாசகம் உரைப்பது காண்க. உவர் - உவர்ப்பு; வெறுப்புமாம்.
இது, தானாகவே வந்து சேர்வரா, நான் சென்று சேர்வேனா எனச் சோதிடம் கூறலை வேண்டுவதாம். (5)
|