1681.

     பைத்த அரவப் பணிஅணிவார்
          பணைசூழ் ஒற்றிப் பதிமகிழ்வார்
     மைத்த மிடற்றார் அவர்தமக்கு
          மாலை இடவே நான்உளத்தில்
     வைத்த கருத்து முடிந்திடுமோ
          வறிதே முடியா தழிந்திடுமோ
     உய்த்த மதியால் சோதிடம்பார்த்
          துரைப்பீர் புரிநூல் உத்தமரே.

உரை:

      முந்நூலணிந்த உத்தம வேதியரே, படத்தையுடைய பாம்பை அணியாகப் பூண்பவரும், மருத வயல் சூழ்ந்த திருவொற்றியூரில் விரும்பி எழுந்தருள்பவரும், மைபோற் கரிய கழுத்தை யுடையவருமான தியாகப் பெருமானுக்கு மாலையிடவேண்டும் என என் மனத்திற் கொண்ட எண்ணம் நிறைவேறுமோ, அல்லது நிறைவுறாது வீணே அழிந்து போகுமோ? நுண்ணிய அறிவால் சோதிட நூல்களை யாராய்ந்து சொல்வீர்களாக. எ.று.

      பை - படம். பையையுடையதாகிய பாம்பு; பைத்த பாம்பு எனவும் மைபோற் கறுத்த மிடறு, மைத்த மிடறு எனவும் வந்தன. மாலையிடுதல் - மணந்து கொள்ளுதல். உளத்தில் வைத்த கருத்து - மனத்திற் கொண்ட ஆசை. வறிதாதல் - வீணாதல். மனத்தோடே புதைந்து கெடுதலை “முடியா தழிந்திடுமோ” என விரித்துரைக்கின்றாள். உய்த்த மதி - நுண்ணிதாகச் செலுத்தும் அறிவு.

     இது, மனத்திலுற்ற ஆசை நிறைவுறுமோ எனச் சோதிடரை உசாவியது.

     (6)