1682.

     தக்க விதியின் மகத்தோடும்
          தலையும் அழித்தார் தண்அளியார்
     மிக்க வளஞ்சேர் திருவொற்றி
          மேவும் பரமர் வினையேன்தன்
     துக்கம் அகலச் சுகம்அளிக்கும்
          தொடர்பும் உண்டோ இலையோதான்
     ஒக்க அறிந்தீர் சோதிடம்பார்த்
          துரைப்பீர் புரிநூல் உத்தமரே.

உரை:

      முந்நூலணிந்த உத்தம வேதியரே, தக்கப் பிரமனுடைய யாகத்தையும் அவனுடைய தலையையும் அழித் தொழித்தவரும், தண்ணிய அருளாளரும், மிகு வளம் பொருந்திய திருவொற்றியூரில் எழுந்தருளும் பரமனுமாகிய தியாகப் பெருமான், வினையையுடையவளாகிய எனது துக்கத்தை நீக்கி இன்பமளிக்கும் நற்றொடர்பு எனக்கு உண்டாகுமா, ஆகாதா? இரு திறங்களையும் ஒப்ப நோக்கி ஒரு சோதிடம் பார்த்துச் சொல்லுவீராக. எ.று.

     பிரமனுடைய மகனாதலால், தக்கனைத் 'தக்கப் பிரமம்' என்று புராணிகர் வழங்குவதால் “தக்க விதி” என்று குறிக்கின்றாள். அவன் சிவபெருமானை விலக்கிச் செய்த யாகத்தை அழித்து, அவன் தலையையும் கொன்று கொய்தமையின், “தக்க விதியின் மகத்தோடும் தலையும் அழித்தார்” என்று நங்கை கூறுகின்றாள். தண்ணளி - சிறந்த அருள். பரமர் - பரமசிவன். மக்கட் கெய்தும் துக்கத்துக் கெல்லாம் காரணம் அவர்கள் செய்த வினை என்று அறிஞர் உணர்ந்துரைப்பது பற்றித் தன்னை “வினையேன்” எனவுரைக்கின்றாள். துன்ப நீக்கமும் சுகப்பேறும் இருள் நீக்கமும் ஒளியும் போல உடனிகழ்ச்சியாகலின், “துக்க மகலச் சுகமளிக்கும் தொடர்பும் உண்டோ” என வினவுகிறாள். அவரவர்க் கெய்தும் துன்ப வின்பங்கட் குரிய காரணங்களை இராசிகளின் இயக்கத்தைக் கணித்துச் சோதிட நூல் கூறுவதால், “தொடர்பு முண்டோ” என்று கேட்கின்றாள். உண்மை இன்மைகட் குரிய ஏதுக்களை ஒப்ப ஆராய்ந்து கூறல் வேண்டுமாதலால், “ஒக்க அறிந்தீர் சோதிடம் பார்த்து உரைப்பீர்” என வுரைக்கின்றாள்.

     இஃது, தனக்கும் தியாகப் பெருமானுக்கும் தொடர்புண்மை யின்மைகளை யாராய்ந்துரைக்கக் கேட்பதாம்.

     (7)