1683.

     வெண்மை நீற்றர் வெள்ளேற்றர்
          வேத கீதர் மெய்உவப்பார்
     வண்மை உடையார் ஒற்றியினார்
          மருவ மருவி மனமகிழ்ந்து
     வண்மை அகலா தருட்கடல்நீ
          ராடு வேனோ ஆடேனோ
     உண்மை அறிந்தீர் சோதிடம்பார்த்
          துரைப்பீர் புரிநூல் உத்தமரே.

உரை:

      முந்நூலணிந்த வேதிய உத்தமரே, வெண்மை நிறத் திருநீறணிபவரும், வெள்ளை நிற எருதினை யூர்தியாகவுடையவரும், வேத கீதங்களைப் பாடுபவரும், உண்மையை விரும்புபவரும், வளமாக அருள் வழங்குபவரும், திருவொற்றியூரை யுடையவருமான சிவபெருமான் என்னையடைந்து கூடக் கூடி மனம் மகிழ்ந்து பக்கம் நீங்காத அவரது திருவருட் கடலில் மூழ்கித் திளைப்பேனா, மாட்டேனா; சோதிடம் பார்த்து உண்மை முடிபு கண்டு உரைப்பீர்களாக. எ.று.

     வெண்மை நீறு வெண்ணீறாதலால், அதனை யணிந்த பெருமானை “வெண்மை நீற்றர்” எனச் சிறப்பிக்கின்றாள். வெள்ளேறு - வெள்ளை நிறமுடைய ஏறு. வேத கீதர் என்று பொதுப்பட மொழியினும் இசைக்குரிய சாம வேதத்தைக் கீதமாகப் பாடுபவர் எனக் கொள்க. “சந்தோக சாமம் ஓதும் வாயான்” (வீழிமிழலை) என நாவுக்கரசரும், “சாம வேதமோர் கீத மோதியத் தசமுகன் பரவும் நாம தேய மதுடையார்” (புகலூர்) என ஞானசம்பந்தரும் கூறுவது காண்க. மெய்ப் பொருளுருவாய் மெய்யுணர்ந்தோர்க் கன்பராய் விளங்குபவராதலின், “மெய்யுவப்பார்” என விளம்புகிறார். கூடி மகிழ்வதும் பிரிந்து வருந்துதலும் காதலர் செயலாதலால், “ஒற்றியினார் மருவ மருவி மனம் மகிழ்ந்து” என்று இசைக்கின்றாள். அண்மை - பக்கம்; ஒன்றாயும் உடனாயும் இருப்பது பற்றி, “அண்மை யகலாது” என்கின்றாள். திருவருளிற் கலந்து இன்புறுவேனா என்பாள், “அருட் கடல் நீராடுவேனோ ஆடேனோ” என வினவுகிறாள். உண்மை யறிதற்குச் சோதிடம் பார்ப்பது மரபாதலின், “உண்மை யறிந்தீர் சோதிடம் பார்த்துரைப்பீர்” என வேண்டுகிறாள். சோதிடம் பார்த்து உண்மையறிந்து உரைப்பீராக என்பது கருத்து.

     இஃது உண்மை யுணர்ந்துரைக்க வேண்டுவதாம்.

     (8)