1685. அள்ள மிகும்பேர் அழகுடையார்
ஆனை உரியார் அரிக்கரியார்
வெள்ள மிகும்பொன் வேணியினார்
வியன்சேர் ஒற்றி விகிர்தர்அவர்
கள்ள முடனே புணர்வாரோ
காத லுடனே கலப்பாரோ
உள்ளம் அறியேன் சோதிடம்பார்த்
துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
உரை: முந்நூலணிந்த வேதிய உத்தமர்களே, அள்ளிக் கொள்ளலாம்படி மிக்க அழகுடையவரும், யானைத் தோலைப் போர்த்தவரும், திருமால் முதலிய தேவர்களால் அடைதற் கரியவரும், கங்கை நீர் மிக்குள்ள பொன்னிறமுடைய சடையை யுடையவரும், விரிந்த எல்லைத் தாகிய திருவொற்றியூர்க்கண் எழுந்தருளும் விகிர்தருமான தியாகப் பெருமான், களவியல் நெறியில் என்னைக் கூடுவாரோ, காதற் கற்பு நெறியில் சேர்வாரோ, அவரது திருவுள்ளம் தெரிந்திலதாகலின், ஒரு சோதிடம் பார்த்துச் சொல்லுமின். எ.று.
அழகின் மிகுதி புலப்படுத்தற்கு “அள்ள மிகும் பேரழகர்” என்று புகல்கின்றாள். புலித்தோலை உடையாகவும், யானைத்தோலைப் போர்வையாகவு முடையரென்பது பற்றிச் சிவனை “ஆனையுரியர்” என்கின்றாள். திருமால் காணாத திருவடியுடையராகலின் “அரிக்கு அரியார்” என்று கூறுகிறாள். வெள்ளம் - கங்கை நீர். பொன்னாற் செய்தது போலச் சடை விளங்குவது புலப்பட, “பொன் வேணியினார்” என்று புகழ்கின்றாள். “பொன் திரண்டன்ன புரிசடை” (அச்சிறு) என ஞானசம்பந்தர் நவில்வர். வியன் - பரப்புணர்த்தும் சொல்; “விரிநீர் வியனுலகம்” (குறள்) என்பது காண்க. விகிர்தன் - படைத்தல் முதலிய ஐந்தொழில்களையும் விளையாட்டாகச் செய்யும் முதல்வன்; வடசொற் சிதைவு. ஒருத்தியை மணக்கும் ஒருவன், களவில் உறவுகொளலும் கற்புக் காதலுறவு கொள்ளலும் என்ற இருவகையில், தியாகப் பெருமான் இன்னது மேற்கொள்வரெனத் தெளிவுறாமையின், “கள்ள முடனே புணர்வாரோ காதலுடனே கலப்பாரோ உள்ளம் அறியேன்” என வுரைக்கின்றாள். களவுவழி நின்று மணப்பது பண்டை நாளைய முறை; வள்ளற் பெருமான் காலத்தில் களவுநெறியின்றிக் கற்பு வழியே நிலவிற்று. சாதியினப் பாகுபாடுகள் மக்களிடையே தோன்றி நிலைபேறு கொண்டதனால் களவுநெறி இடம் பெறாமல் மறைந்தது. களவியல் கள்ளமெனவும், கற்பியல் காதலெனவும் குறிக்கப்படுகின்றன.
இது களவுறவோ கற்புறவோ தியாகேசர் கருதுவது யாதென உசாவுவது. (10)
|