92. திருவருட் பெருமிதம்

செவிலி கழறல்

திருவொற்றியூர்

    அஃதாவது திருவருள் நலத்தையும் அதனைப் பெறுவதில் உண்டாகும் ஆக்கத்தையும் நினைந்து இன்புற எய்தும் இறும்பூது. இதனை மகள் பெற்று மெய்மெலிவு நிறையக் கண்டு செவிலி மருண்டு கழறிக் கூறுகிறாள். இன்பத்துறையில் நற்றாயினும் செவிலி சிறந்த துணையாதலால் அவள் கூற்று எடுத்தோதப்படுகிறது. “ஆய்பெருஞ் சிறப்பின் அருமறை கிளத்தலின், தாயெனப்படுவோள் செவிலியாகும்” என்பது தொல்காப்பியம். இதன்கண் பாட்டுத்தோறும் தலைவனான தியாகப் பெருமானது உயர்வையும் அவனதருள் பேற்றின் அருமையையும், விளைவெண்ணாத மகளது சிறுமையையும் விளங்க வுரைக்கின்றாள்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1686.

     விடையார் விடங்கப் பெருமானார்
          வெள்ளைச் சடையார் வெண்ணகையால்
     அடையார் புரங்கள் எரித்தழித்தார்
          அவரே இந்த அகிலமெலாம்
     உடையார் ஒன்று நினைத்தனைஊர்
          ஒற்றி அவர்க்கென் றுணர்ந்திலையோ
     இடையா மயல்கொண் டெதுபெறுவாய்
          ஏழை அடிநீ என்மகளே.

உரை:

      என் மகளே, எருதை ஊர்தியாகவுடையவரும், அழகுடைய பெருமானாரும், கங்கை தங்கிய சடையையுடையவரும், பகைவருடைய மதில்களை வெண்ணகை செய்து வெந்தழியச் செய்தவருமான தியாகப் பெருமான், இந்த உலகனைத்தையும் தமது உடைமையாகக் கொண்டவர் என நினைக்கின்றாய்; அவர் ஊரே ஒற்றி வைக்கப்பட்டதென்னும் பொருளில் ஒற்றியூர் எனப்படுவதை அறியாய்; நீங்கா வேட்கையால் மையல் கொள்வதால் நீ என்ன பயன் பெறுவாய்; தெளிந்த அறிவில்லாமையால் நீ ஓர் ஏழையாவாய். எ.று.

     விடை - எருது. விடங்கம் - அழகு; உளியால் வெட்டிச் செதுக்கிப் புனையப்படாதது என்பது இதன் சொற்பொருள். வெள்ளம் - கங்கைப் பெருக்கு. அடையார் - பகைவரான அசுரர். வெண்ணகை - குறுமுறுவல்; புன்னகையுமாம். உலகங்கள் அத்தனையும் படைத்தளிக்கும் பரமனாதலால், “அகிலமெலாம் உடையார் என்று நினைத்தனை” என வுரைக்கின்றாள். உடையராயினும் அதனால் அவற்கொரு பயனுமில்லை; “காரியம் காசினியாதி, ஏரியல் ஈசன் கத்தா இவற்கிது போகமாதல் செல்லாது” (ஞான. 12) என வாகீசமுனிவர் கூறுவது காண்க. தாம் உறையும் ஊரே தமக்கின்றி ஒற்றி வைக்கப்பட்டது என்பாளாய், “ஊர் அவர்க்கு ஒற்றி என்று உணர்கிலையே” என்றும், 'இதனை யெண்ணாமல் மிக்க வேட்கை கொண்டு மயங்குகின்றாயாதலால், நீ அறிவில்லாதவள் எனக் கடியலுற்று' “இடையா மயல் கொண்டு என் பெறுவாய், நீ ஏழையடி” என்றும் இடித்துரைக்கின்றாள். இடையா மயல் - நீங்காத காதல் மயக்கம். ஏழைமை - அறிவின்மை.

     (1)