1688.

     மட்டுக் கடங்கா வண்கையினார்
          வளஞ்சேர் ஒற்றி வாணர்அவர்
     பட்டுத் துகிலே திசைகளெலாம்
          படர்ந்த தென்னப் பரிந்தனையோ
     கட்டத் துகிலும் கிடையாது
          கந்தை உடுத்த தறிந்திலையோ
     இட்டுப் புணர்ந்திங் கெதுபெறுவாய்
          ஏழை அடிநீ என்மகளே.

உரை:

      என் மகளே, அளவுக் கடங்காத கொடையையுடையவரும், வளம் பொருந்திய திருவொற்றியூரில் எழுந்தருள்பவருமான சிவபெருமானது பட்டாடையே, திக்கெட்டும் பொன்னிறம் பெறப் பரவியுளது என்று கருதி, அவர்பாற் காதல் கொண்டனை போலும்; அவர்க்கு இடையில் உடுக்கப் பருத்தியாடையும் கிடையாது; கந்தையாகிய கீளும் கோவணமுமே அவர் உடுத்திருப்பதை அறியாய்; அவரை முன்னிட்டுக் கூடி யாது சுகம் பெறுவாய்; நீ நல்லறிவில்லாத ஏழை. எ.று.

     மட்டு - அளவு. வண்கை - வரையாது வழங்கும் வளவிய கை. வாழ்நர் - வாணரென வந்தது. அந்திமாலைப் போதில் திக்கெட்டும் பொன்னிறம் பொலிவது காண்கின்றவட்குப் பொன்னிற மேனியனாகிய சிவனது நினைவு மிகுவது அறிந்து பேசுகின்றாளாகலின் “பட்டுத் துகிலே திசைகளெலாம் படர்ந்த தென்னப் புரிந்தனையோ” எனக் கூறுகிறாள். பட்டுத் துகில் - பொன்னிறப் பட்டாடை. பரிதல் - அன்பு செய்தல். இடையில் ஆடையுடுப்பதை, ஆடை கட்டுதல் என்னும் வழக்குப்பற்றி, “கட்டத் துகிலும் கிடையாது” என்று உரைக்கின்றாள். துகில் - பருத்தியாடை. சிவனுக்குத் தோல் ஆடையாதலின், “துகில் கிடையாது” என்கிறாள். கந்தை - கிழிந்த துகில். கோவணமாகவும் கீளாகவும் கிழித்துக் கொள்ளப்படுதலின், இரண்டையும் கந்தை என இகழ்கின்றாள். இடுதல் - முன்னிடுதல். இவ்வாறு வறுமைக் கோலத்திலிருப்பவரை மணத்தல் அறிவுடைமையாகாதெனக் கழறுவதால், “ஏழையடி நீ” என வுரைக்கின்றாள்.

     (3)