1689.

     நடங்கொள் கமலச் சேவடியார்
          நலஞ்சேர் ஒற்றி நாதர்அவர்
     தடங்கொள் மார்பின் மணிப்பணியைத்
          தரிப்பார் நமக்கென் றெண்ணினையால்
     படங்கொள் பாம்பே பாம்பென்றால்
          படையும் நடுங்கும் பார்த்திலையோ
     இடங்கொள் மயல்கொண் டெதுபெறுவாய்
          ஏழை அடிநீ என்மகளே.

உரை:

      என் மகளே, நடம்புரியும் தாமரை போன்ற சிவந்த திருவடியை யுடையவரும், நல்வளம் பொருந்திய திருவொற்றியூரை யுடைய தலைவருமான சிவபெருமான், தமது அகன்ற மார்பிலுள்ள மணிகளையுடைய பூணாரத்தை நமக்கு அணிவாரென எண்ணினை போலும்; அது மணியையுடைய பாம்பாகும்; பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பது அறியாயோ? மனத்தின்கண் வேட்கை மயக்க முறுதலால் யாது பயன் பெறுவாய்; நீ ஏழையாவாய். எ.று.

     நடம் - திருக்கூத்து. அம்பலத்தில் ஆடுதலால், திருவடி செந்தாமரை போல் சிவத்தலால், “நடங்கொள் கமலச் சேவடியார்” என்று கூறுகிறாள். நலம் - பல் வளங்களால் உளதாகும் நன்மை: நாதர் - தலைவர். தடங்கொள் மார்பு - அகன்ற மார்பு; பெரிய மார்பு என்னும் மார்பு. மணிப் பணி - மணிகள் இழைத்த பொன்மாலை; மணியையுடைய பாம்பு எனவும் பொருள்படும். மணிகள் இழைத்த பொற்பணியன்று அவர் மார்பிலணிவது மணியையுடைய பாம்பு என்பாள், “படங்கொள் பாம்பு” எனப் பகர்கின்றாள். 'பாம்பென்றால் படையும் நடுங்கும்' என்பது பழமொழி. அது நமக்கு ஆகாது என்பாள், “படையும் நடுங்கும் பார்த்திலையோ” என வுரைக்கின்றாள். உலகறிந்த இதனை யுணராமல் அவர் மேற் காதல்கொள்வது அறியாமை எனக் கழறுவாளாய், “ஏழையடி நீ என் மகளே” என்று கூறுகிறாள். மனம் இடமாகக் காதல் வேட்கை நிறைந்தமை விளங்க, “இடங்கொள் மயல்” என்கிறாள். மிக்க காமத்தை, “இடங் கழி காமம்” என்பது நூல் வழக்கு.

     (4)